Thursday, December 12, 2013




Tuesday, July 24, 2012

தமிழ் வளர்த்த தருமையாதீனம் 8

                                      ஸ்ரீ சிவப்பிரகாச சுவாமிகள்


சிவப்பிரகாச சுவாமிகள், காஞ்சிபுரத்தில் இறைவன் திருவருளால்


பிறந்தார். சிறுவயதிலேயே தந்தையை பறிகொடுத்துவிட்டதால்

தனது தமையன் வேலாயுதம், கருணைப்பிரகாசம்,தமக்கை

ஞானாம்பிகை ஆகியோருடன் திருவண்ணாமலைக்கு

வந்து சேர்ந்தார். தனது தந்தையின் குருவான குருதேவரை தரிசித்து. அவருடனே தங்கியிருந்து கல்வி கற்றார். சிவஞானத்தில் பெருநிலை அடையப்பெற்ற குருதேவரிடம் தீட்சை பெற்றார்.

சதா சிவசிந்தனையிற் திளைத்திருந்தார், சுவாமிகள். திருவண்ணாமலை கிரிவலத்தின் பெருமையை தன் உள்ளுணர்வால் உணர்ந்து புறப்பட்டார்.





ஒவ்வொரு முறை வலம் வரும் பொழுதும் அருணாச்சலேஸ்வரர் மேல் பாடல் பாடி-அன்றைய தினத்தில் 100 பாடல்கள் இயற்றினார்.
அதற்கு “சோண சைலமாலை” என்று பெயர். சுவாமிகள் மேலும் ஆழ்ந்த கல்வி பயில வேண்டும் என்ற ஆசையினால் தமது சகோதரர்களுடன் தென்னகப் பிரயாணம் தொடங்கினார். திருச்சிக்கருகில் உள்ள பெரம்பலூரில் இரண்டு ஆண்டுகள் தங்கியிருந்து சிவபூஜையை செய்து வந்தார்.


அங்கிருந்து திருநெல்வேலி வந்து தாமிரபரணி ஆற்றங்கரையருகில் உள்ள சிந்துபூத்துறைக்கு வந்து சேர்ந்தார்.அவ்வூரிலுள்ள தர்மபுர ஆதினத்து கட்டளை தம்பிரான் வெள்ளியம்பல சுவாமிகளுக்கு சீடனாக இருந்து கல்வி கற்க விரும்பினார்.


வெள்ளியம்பலவாணர் தருமை ஆதீனம் நான்காம் பட்டத்தில் விளங்கிய குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக பரமாச்சாரியாரிடம் சிவதீட்சை பெற்றவர்,காசிக்கு சென்று குமரகுருபரரிடம் கல்வி பயின்றவர்.
அத்தகைய இலக்கண இலக்கிய செம்மலிடம் மாணாக்கன் ஆவதைப்
பெரும் பேறாகக் கருதினார் சிவப்பிரகாச சுவாமிகள்.


சிவப்பிரகாசரின் தமிழார்வத்தை அறிந்த முனிவர்- அவரின் ஆற்றலை அறிய விரும்பி “கு” என்று தொடங்கி “கு” என்று முடித்து இடையே ஊருடையான் என்று வருமாறு நேரிசை வெண்பா ஒன்று பாடுமாறு ஆணையிட்டார். சுவாமிகளும் தயங்காமல் உடனே பாடிக் காட்டினார்.
வெண்பாவைக் கேட்டவுடன் சிவப்பிரகாசரின் ஆற்றலைக் கண்டு
வெள்ளியம்பல சுவாமிகள் மிகுந்த வியப்புற்றார்.அவரை அப்படியே ஆரத் தழுவிகொண்டார்.” இத்தகைய ஆற்றல் படைத்த உமக்கா தமிழ் சொல்லித்தர வேண்டும் “ என்று கேட்டார். வெள்ளியம்பல சுவாமிகள், சிவப்பிரகாசரை தன்னுடன் இருத்திக்கொண்டு சுவாமிகளின் சகோதரர்களாகிய வேலாயுத சுவாமிகள், கருணைப்பிரகாச சுவாமிகள் ஆகிய இருவருக்கும் பதினைந்து நாட்களில் ஐந்திலக்கணங்களையும்
கற்றுக் கொடுத்தார்.

சிவப்பிரகாசரின் எண்ணம் நிறைவேறியது. மகிழ்ச்சியில் மலர்ந்தார். பெரம்பலூரில் தனக்கு காணிக்கையாக கொடுத்த முந்நூறு பொற்காசுகளை தனது குருவின் காலடியில் சமர்ப்பித்தார்.வெள்ளியம்பல சுவாமிகளோ,” இவை எமக்கு வேண்டா, அதற்குப் பதிலாக திருச்செந்தூரில் எம்மை இகழ்ந்து பேசுதலையே இயல்பாக கொண்டு திரியும் ஒரு தமிழ்ப்புலவனின் அகங்காரத்தை ஒடுக்கி எம் கால்களில் விழச் செய்ய வேண்டும் “என்றார்.

குருவின் அவாவை நிறைவேற்றும் பொருட்டு திருச்செந்தூர் புறப்பட்டார். கோவிலினுள் எழுந்தருளியிருக்கும் முருகப் பெருமானை தரிசித்து விட்டு-வலம் வந்தார்.அப்பொழுது முனிவர் சொன்ன அப்புலவனைக் கண்டார். புலவனும், சுவாமிகளைக் கண்டு இவர் வெள்ளியம்பல
சுவாமிகளிடமிருந்து வந்தவர் என்பதையறிந்து வசை மாறி பொழிந்தான். இருவருக்கும் விவாதம் முற்றியது.

புலவன் சுவாமிகளை பந்தயத்திற்கு அழைத்தான். இருவரும்
நீரோட்டகயமகம் பாடவேண்டும் என்றும் யார் முதலில் முப்பது பாடலை பாடி முடிக்கிறார்களோ அவரே ஜெயித்தவர்- தோற்பவர் மற்றவர்க்கு அடிமையாக வேண்டும் என்றான். சிவப்பிரகாச சுவாமிகளும் சிறிதும் தயங்காது பாடி முடித்தார். ஆனால் புலவனால் ஒரு பாடல் கூட பாட முடியவில்லை-வெட்கித் தலைகுனிந்து சுவாமிகளிடம் சரணடைந்தான்.
அதற்குச் சுவாமிகள் அடியேன் வெள்ளியம்பல சுவாமிகளின் அடிமை-நீர் அவருக்கே அடிமையாதல் முறை” என்று கூறி தம் குருநாதரிடம் அழைத்துச் சென்று அவருக்கே அடிமையாக்கினார்.

வெள்ளியம்பல சுவாமிகள் அகங்காரம் கொண்ட  புலவனின் அகந்தையை அடக்கி அவனுடைய கவனத்தை பரம் பொருளிடத்தே செலுத்த வைத்து “நல்வாழ்வு-வாழ்ந்து வா” என்று கூறி அனுப்பி வைத்தார்.


குருநாதரிடம் பிரியாவிடை பெற்று தமது இளவல்களுடன்  துறைமங்கலம் வந்து, பின்னர் அங்கிருந்து வாலிகண்டபுரத்தின் வடமேற்கு திசையிலுள்ள திருவெங்கையிலே சில காலம் தங்கி சிவபூஜை செய்துவந்தார்.

வள்ளல் அண்ணாமலை ரெட்டியார் கட்டி தந்த மடத்தில் தங்கியிருந்தவாறே -திருவெங்கைக் கோவை,திருவெங்கைக் கலம்பகம், திருவெங்கையுலா, திருவெங்கை அலங்காரம் என்னும் நான்கு நூல்களைத் தந்தருளினார். சிவப்பிரகாச சுவாமிகள், தமது உடன்பிறந்தவர்களுக்கு திருமணம் செய்து வைத்து-அண்ணாமலை ரெட்டியாருடன் புனித பயணம்
புறப்பட்டார்.

சிதம்பரத்திற்கு வந்து, அங்கு ஆத்ம சாதனையில் தீவிரமாக இறங்கினார். அங்கு சிவப்பிரகாச விசாகம்,தருக்க பரிபாஷை, சதமணிமாலை, நான்மணி மாலை முதலிய நூலகளை செய்தருளினார்.

அங்கிருந்து திருக்காட்டுப்பள்ளிக்கு வந்து சிவபெருமானை தரிசனம் செய்து -சில காலம் தங்கியிருந்து விட்டு-பின்னர் காஞ்சிபுரத்திற்கு
புறப்பட்டார்கள். வழியில் சாந்தலிங்க சுவாமிகளை கண்டு அளவளாவி
மகிழ்ந்து, அவருடன் சிவஞான பாலய சுவாமிகளை தரிசிக்க புதுவை
வந்து,அங்கிருந்து பிரம்மபுரம் வந்து சேர்ந்தனர்.


சாந்தலிங்க சுவாமிகள், சிவஞான பாலைய சுவாமிகளின் பேராற்றலை -பெருமைகளை வானளாவ புகழ்ந்து கூறி, அவரைப் பற்றி ஒரு பா பாடுங்களேன் என்றார்.அதற்கு சிவப்பிரகாச சுவாமிகள்- இறைவனைத் துதிக்கும் நாவால்  மனிதனை துதியேன் என்று கடுமையாக கூறி விட்டார்.

இருவரும் அருகிலுள்ள புத்துப்பட்டு ஐயனார் கோவிலின் பின்புறம்
அன்றிரவு தங்கினர்.சிவப்பிரகாச சுவாமிகளின் கனவில் முருகப் பெருமான்ம்மயில் வாகனத்தோடு காட்சியளித்தார். நிறைய பூக்களை முருகப்பெருமான் சுவாமிகளிடம் கொடுத்து இவற்றை ஆரமாக தொடுத்து எமக்குச் சூட்டுவாய் என்றருளினார்.

காலையில் கண் விழித்ததும் சாந்தலிங்க சுவாமிகளிடம் கனவில் முருகப் பெருமான் வந்ததை தெரிவித்தார். சாந்தலிங்க சுவாமிகள்,சிவஞான பலைய சுவாமிகளுக்கு, முருகப் பெருமான் குரு.அவர் மீது பேரன்பு கொண்டு பெரும் பூஜை செய்து வருகிறார்-தேசிகர்.

சிவஞான பாலைய சுவாமிகளின் பெருமையை உணர்த்துவதற்காகவே முருகபெருமான் சிவப்பிரகாச சுவாமிகளின்  கனவில் வந்து உணர்த்தியுள்ளார்- என்று விளக்கினார். மறுநாள் சிவஞான பாலைய சுவாமிகளை இருவரும் சந்தித்தனர். தாலாட்டு, நெஞ்சு விடு தூது என்ற இரு பிரபந்தங்களைப் பாடி தேசிகர் சன்னிதானத்தில் அரங்கேற்றினார்-சிவப்பிரகாச சுவாமிகள்.

சிவஞான பாலைய சுவாமிகளும், சிவப்பிரகாச சுவாமிகளுக்கு ஞானாபதேசம் செய்தார். இருவரும் குருவின் சீடர்களானார்கள்.சிவஞான பாலைய சுவாமிகளின் சொற்படியே தன் தமக்கையை சாந்தலிங்க சுவாமிகளுக்கு திருமணம் செய்து கொடுத்தார்.தேசிகரிடம் விடைபெற்று, காஞ்சிபுரத்திற்கு வந்து கன்னட மொழியில் எழுதப்பட்ட விவேக சிந்தாமணி என்னும் நூலின் ஒரு பகுதியை தமிழில் வேதாந்த சூடாமணி என்று மொழிபெயர்த்தார்.மேலும் சித்தாந்த சிகாமணி, பிரபுலிங்கலீலை என்ற நூல்களை எழுதினார். திருப்பள்ளியெழுச்சி, பிள்ளைத்தமிழ் என்ற இரண்டு நூல்களைதன் ஞானாசிரியர் மேல் பாடினார்.


காஞ்சிபுரத்தை விட்டு புறப்பட்டு கூவம் என்னும் சிவத்தலத்தை
அடைந்து திருக்கூவப்புராணம் பாடி அருளினார். அங்கிருந்து புறப்பட்டு பொம்மையாபாளையத்திற்கு வந்து தன் ஞானாசிரியரை தரிசித்து லிங்கதத்துவம், அனுபவம், ஈசனின் உறைவிடம்  அவத்தைகள் போன்ற நுணுக்கமான தத்துவ விஷயங்களை தெரிந்துகொண்டார். பின்னர் விருத்தாசலம் புறப்பட்டார்.

சிவஞான பாலைய சுவாமிகள் இறைவனோடு கலந்த செய்தியை
கேள்விப்பட்டு மறுபடி பிரம்மபுரத்திற்கு வந்தடைந்தார். குருவின்
சந்நிதானத்தில் வீழ்ந்து, அழுது புலம்பினார். தம் குருவின் மீதிருந்த
அளவற்ற அன்பினால் பலமுறை வீழ்ந்து வீழ்ந்து வணங்கினார்.
பொம்மையார்பாளைய கடலோரத்தில் அமர்ந்து மணலிலே “நன்னெறி”
வெண்பா நாற்பதையும் தன் விரலால் எழுத, அங்குள்ளோர் அதை
எழுதிக் கொண்டனர்.

காலம் வேகமாக சென்றது. பிரம்மபுரத்திலிருந்து புறப்பட்டு புதுவை வந்து சிவதலங்களை வணங்கி விட்டு,நல்லாத்தூர் வந்து சேர்ந்தார்.அது ஒரு சிற்றூர்.எங்கு பார்த்தாலும் நுணா மரங்களும், கள்ளிக் காடுகளுமாக இருந்தது. அவ்வூரில் ஒரு சிவன் கோவிலும் இருந்தது. அக்கோயிலின் அருகே உள்ள நுணா மரத்தின் கீழ் அமர்ந்து தன் தவத்தை மேற்கொண்டார்.

அதிகாலையில் எழுந்து நல்லாற்றிலிருந்து புறப்பட்டு வில்லியனூர் அருகே ஓடும் அற்றில் நீராடுவார்.அங்குள்ள வில்வ இலைகளை
சிவபெருமான் பூஜைக்காக பறித்துக் கொண்டு, நல்லாற்றூருக்கு அதிகாலையிலேயே சென்று விடுவார்.


அங்கு இவ்வாறு இருக்கும் பொழுது, சிவஞான மகிமையும்அபிஷேக மாலையும் நெடுங்கழி நெடிலும், குறுங்கழி நெடிலும்,நிரஞ்சன மாலையும், கைத்தலமாலையும் சீகாளத்திப்புராணத்தில் கண்ணப்பச் சருக்கமும், நக்கீரச்சருக்கமும் எழுதினார்.

பல ஆண்டுகள் ஆழ்ந்த தவத்தில் ஈடுபட்டிருந்தார்.தவம் முடிந்தது.தவ சித்தி பெற்றார்.சுவாமிகளின் பூஜைகள் பலிக்கத் தொடங்கின.அவருக்கு முப்பத்திரண்டு வயது வந்தது.தாம் சிவமாகும் காலம் வந்ததை உணர்ந்தார்.

புரட்டாசி மாதம- பௌர்னமி திதியில் பரம்பொருளோடு ஐக்கியமானார்.
எங்கு சுவாமிகள் சித்தி அடைந்தாரோ அங்கேயே சுவாமிகளை சமாதி வைப்பதற்காக அங்குள்ள நுணா மரம் வெட்டப் பட்டது.அந்த நுணா மரத்தின் கீழ் தான் சுவாமிகள் தவம் செய்வது வழக்கம். வெட்டப் பட்ட நுணா மரத்தை அங்குள்ள ஒரு வீட்டில் கொண்டு போய்ட்டார்கள். அக்கணமே அந்நுணா மரம் எரிந்து சாமபலாகியது.ஆனால் வீட்டிலிருந்த வேறு எந்தவொரு பொருளையும் அந்நெருப்பு தீண்டவில்லை.


சுவாமிகளின் காலம் 17-ம் நூற்றாண்டாகும்.சுவாமிகள் வாழ்ந்தது
32 ஆண்டுகள். சுவாமிகளின் நூல்களிலே ஆழ்ந்த சைவ சித்தாந்தக் கருத்துக்கள்,தெளிவான உயிர்நிலைத் தத்துவங்கள், மெய்ப் பொருளைக்
காட்டுகின்ற விரிவான தர்க்க பாஷை யாவும் மலை போல் குவிந்துள்ளன. முப்பத்திரண்டு வயதில் முப்பத்திரண்டு தெய்வீகத் தத்துவங்களை செந்தமிழில் தந்தருளியவர் ஓம் ஸ்ரீ சிவப்பிரகாச சுவாமிகள்.

Tuesday, June 19, 2012

தமிழ் வளர்த்த தருமையாதீனம் 7

தருமபுரம் ப. சுவாமிநாதன்                                                             http://tawp.in/r/


தருமபுரம் ப. சுவாமிநாதன் (மே 29, 1923 - 15 அக்டோபர் 2009) தமிழிசைத் தேவாரப் பேரறிஞரும், சைவ சித்தாந்த உலகின் இசைஞானி என்றும் போற்றப்படுபவர். திருமுறைகளைப் பொருள் விளங்குமாறு இசைத்தவர். பண்ணிசைக்குப் பல்கலைக்கழகமாகவே திகழ்ந்தவர்.


 வாழ்க்கைக் குறிப்பு

தருமபுரம் ப. சுவாமிநாதன் நாகப்பட்டினம் மாவட்டம், நன்னிலம் வட்டம், வீராக்கண் என்ற ஊரில் மு.பஞ்சநாத முதலியார் - பார்வதி அண்ணி அம்மாள் தம்பதிகளுக்கு மூன்றாவது மகவாகப் பிறந்தார். இவரது இயற்பெயர் இராஜகோபால்.


தனது 12 வது அகவையில் தருமபுர ஆதீன மடத்தில் சேர்ந்து அங்கு 24-வது மகா சன்னிதானம் சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளின் தொண்டராகப் பணிபுரிந்துகொண்டே, தேவாரத் தமிழிசைப் பள்ளியில் திருமுறை கலாநிதி ஆர். வேலாயுத ஓதுவாரிடம் பயின்றார். ஆறு ஆண்டுகள் பயிற்சிக்குப் பின், முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்று, "தேவார இசைமணி" பட்டம் பெற்றார். பின்னர் சிதம்பரம், அண்ணாமலை இசைக் கல்லூரியில், சித்தூர் சுப்பிரமணிய பிள்ளையின் வழிகாட்டலில் 4 ஆண்டுகள் பயின்று முதல் வகுப்பில் தேறி "சங்கீத பூசணம்" பட்டத்தைப் பெற்றார். மதுரை சுப்பிரமணிய முதலியாருடன் இணைந்து மேலும் சில ஆண்டுகள் இசைப் பயிற்சி பெற்றார்[1]. கிட்டத்தட்ட 60 ஆண்டுகள் இசைப் பணியில் இவர் ஈடுபட்டார். தேவார இசையை குறிப்பாக பண்ணிசையை உலகெங்கும் பரப்புவதில் இவர் பெரும் பங்கு வகித்தார். 1952 ஆம் ஆண்டில் இருந்து ஆல் இந்தியா வானொலியில் முதற்தர இசைக் கலைஞராக இருந்தவர். யாழ்ப்பாணத்தில், 1960களில் "சைவ பரிபாலன சபை" ஆதரவில் ஏறத்தாழ ஐந்து ஆண்டுகள் தங்கியிருந்து பண்ணிசை மாணவர் பலரை உருவாக்கினார்.


1968-ல் தருமபுர ஆதீன தேவாரப் பள்ளி ஆசிரியப் பணியில் இருந்து விலகி சுவாமிநாதன், தமிழகமெங்கும் தேவாரப் பாடல்களைப் பாடும் திருமுறைப் பணிகளில் ஈடுபட்டார். இவரின் குரலிசை பல குறுந்தட்டுகளாகவும் ஒலிநாடாக்களாகவும் வெளிவந்துள்ளன. பன்னிரு திருமுறையில் உள்ள 18,246 பாடல்களுள் 10,325 பாடல்களுக்கு குரலிசை தந்துள்ளார். இவற்றுள் 11ஆம் திருமுறையின் 393 பாடல்களைத் தருமபுரம் ஆதீனம் நடத்திவரும் www.thevaaram.org மின்னம்பல தளத்தில் சேர்க்கும் உரிமையை வாணி பதிவகத்தார் தந்துள்ளனர்.

Monday, June 18, 2012

மெய்கண்ட சாத்திரங்கள்

மெய்கண்ட சாத்திரங்கள்                                                  http://tawp.in/r/9j3


மெய்கண்ட சாத்திரங்கள் என்பன தமிழ் நாட்டிலே சைவ சமயத்துக்குரிய அடிப்படையான தத்துவமாக எழுந்த சைவ சித்தாந்தத்தை விளக்க, 12ம் நூற்றாண்டு தொடக்கம் 14ம் நூற்றாண்டு வரையிலான காலப்பகுதியில் தோன்றிய பதின்நான்கு நூல்களையும் குறிக்கும்.



"உந்தி களிறு உயர்போதம் சித்தியார்

பிந்திருபா உண்மைப் பிரகாசம் - வந்த அருட்

பண்பு வினா போற்றிக்கொடி பாசமிலா நெஞ்சுவிடு

உண்மைநெறி சங்கற்ப முற்று"



சைவ சித்தாந்தசாத்திரங்கள் பதினான்கும் அவற்றினை இயற்றியோர்களும்.



திருவுந்தியார் - திருவியலூர் உய்யவந்த தேவநாயனார்

திருக்களிற்றுப்படியார் - திருக்கடவூர் உய்யவந்த தேவநாயனார்

சிவஞானபோதம் - மெய்கண்ட தேவநாயனார்

சிவஞான சித்தியார் - திருநறையூர் அருள்நந்தி தேவநாயனார்

இருபா இருபஃது - அருள்நந்திசிவாசாரியார்

உண்மை விளக்கம் - திருவதிகை மனவாசகங்கடந்தார்

சிவப்பிரகாசம் - உமாபதிசிவாசாரியார்

திருவருட்பயன் - உமாபதிசிவாசாரியார்

வினாவெண்பா - உமாபதிசிவாசாரியார்

போற்றிப்பஃறொடை - உமாபதிசிவாசாரியார்

உண்மைநெறி விளக்கம் - உமாபதிசிவாசாரியார்

கொடிப்பாட்டு - உமாபதிசிவாசாரியார்

நெஞ்சுவிடுதூது - உமாபதிசிவாசாரியார்

சங்கற்ப நிராகரணம் - உமாபதிசிவாசாரியார்

என்பன அவையாகும். இந்தப் 14 நூல்களுள்ளும் தலை சிறந்ததாகக் கருதப்படுவது மெய்கண்டார்இயற்றிய சிவஞான போதம்ஆகும். இந்தப் 14 நூல்களும் பல்வேறு ஆசிரியர்களால் இயற்றப்பட்டிருப்பினும், இவற்றுட் தலையாய நூலை எழுதிய மெய்கண்டார் பெயரிலேயே முழுத் தொகுதியையும் மெய்கண்ட சாத்திரம்என்கின்றனர். சிவஞான சித்தியார், இருபா இருபது ஆகிய இரு நூல்களையும் இயற்றியவர் அருள்நந்தி சிவாச்சாரியார். திருவுந்தியார் திருவியலூர் உய்யவந்ததேவ நாயனார்என்பவராலும், திருக்களிற்றுப்படியார் திருக்கடவூர் உய்யவந்ததேவ நாயனார்என்பவராலும் எழுதப்பட்டவை. உண்மை விளக்கம் என்ற நூல் திருவதிகைமனவாசகங் கடந்தார்என்பவரால் எழுதப்பட்டது. சிவப்பிரகாசம் முதல் சங்கற்ப நிராகரணம் ஈறாகவுள்ள எட்டு நூல்களையும் இயற்றியவர் உமாபதி சிவாசாரியார்ஆவார்.

சைவத் திருமுறைகள்


சைவத் திருமுறைகள் என்பவை பல்லவர் காலத்திலும் அதன் பின்னரும் தோன்றிய சைவ சமய நூல்களின் தொகுப்பாகும். இவை மொத்தம் 12 திருமுறைகளாக வகுக்கப்பட்டுள்ளன. 12 திருமுறைகளும் அவற்றை இயற்றியோரும் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன.



திருமுறைத் தொகுப்பு

10ம் நூற்றாண்டில் இராஜராஜ சோழனின் ஆட்சியின்போது, சிதம்பரம் கோயிலிலே கவனிப்பாரற்றுக் கிடந்த திருமுறைகள் பூச்சிகளால் அரிக்கப்பட்டு அழிந்தவை போக எஞ்சியவற்றை, நம்பியாண்டார் நம்பி என்பவர் திருமுறைகளாகத் தொகுத்தார்.


திருமுறைகள் பழந்தமிழ் இசையையொட்டிய பண்களுடன் பாடப்பட்டு வருகின்றன. சைவக் கோயில்களிலும், சைவர்கள் வீடுகளிலும், பாடசாலை முதலிய இடங்களில், சமய நிகழ்ச்சிகளின் போதும் திருமுறைகள் இன்றளவும் பாடப்பட்டு வருகின்றன. இவை பன்னிரு திருமுறைகள் எனும் அழைக்கப்பட்டன.



பன்னிரு திருமுறைகளின் பட்டியல்       -   நூல் ஆசிரியர்

1 முதலாம் திருமுறை           தேவாரம்     -   திருஞானசம்பந்தர்

2 இரண்டாம் திருமுறை                                 -   திருஞானசம்பந்தர்


3 மூன்றாம் திருமுறை                                    -  திருஞானசம்பந்தர்


4 நான்காம் திருமுறை                                     -  திருநாவுக்கரசர்

5 ஐந்தாம் திருமுறை                                         -  திருநாவுக்கரசர்



6 ஆறாம் திருமுறை                                         -  திருநாவுக்கரசர்


7 ஏழாம் திருமுறை                                           -  சுந்தரர்

எட்டாம் திருமுறை
     திருவாசகம்                                                      -  மாணிக்கவாசகர்

    திருக்கோவையார்                                         - மாணிக்கவாசகர்


 
9 ஒன்பதாம் திருமுறை

திருவிசைப்பா                              - திருமாளிகைத் தேவர்

                                                               சேந்தனார்

                                                               கருவூர்த் தேவர்

                                                               பூந்துருத்தி நம்பிகாடநம்பி

                                                               கண்டராதித்தர்

                                                               வேணாட்டடிகள்       

                                                               திருவாலியமுதனார்

                                                               புருடோத்தம நம்பி

                                                               சேதிராயர்

                                                               திருப்பல்லாண்டு சேந்தனார்

10 பத்தாம் திருமுறை

திருமந்திரம்                                     - திருமூலர்

11 பதினோராம் திருமுறை

திருமுகப் பாசுரம்                         - திரு ஆலவாய் உடையார்

திருவாலங்காட்டுத் திருப்பதிகம்     -காரைக்கால் அம்மையார்

திருவிரட்டை மணிமாலை                -காரைக்கால் அம்மையார்


அற்புதத்திருவந்தாதி                               -காரைக்கால் அம்மையார்


சேத்திர வெண்பா                                 - ஐயடிகள் காடவர்கோன் நாயனார்

பொன்வண்ணத்தந்தாதி                     - சேரமான் பெருமான் நாயனார்

திருவாரூர் மும்மணிக்கோவை   - சேரமான் பெருமான் நாயனார்


திருக்கைலாய ஞானஉலா அல்லது ஆதி உலா - சேரமான் பெருமான் நாயனார்



கயிலைபாதி காளத்திபாதி அந்தாதி -  நக்கீர தேவ நாயனார்

திருஈங்கோய்மலை எழுபது                - நக்கீர தேவ நாயனார்


திருவலஞ் சுழி மும்மணிக்கோவை- நக்கீர தேவ நாயனார்


பெருந்தேவபாணி                                       - நக்கீர தேவ நாயனார்


கோபப் பிரசாதம்                                         - நக்கீர தேவ நாயனார்


கார் எட்டு                                                        - நக்கீர தேவ நாயனார்


போற்றித் திருக்கலிவெண்பா               - நக்கீர தேவ நாயனார்


திருமுருகாற்றுப்படை                              - நக்கீர தேவ நாயனார்


திருக்கண்ணப்ப தேவர் திருமறம்      -கல்லாட தேவ நாயனார்

மூத்த நாயனார் திருஇரட்டை மணிமாலை- கபிலதேவ நாயனார்

சிவபெருமான் திருஇரட்டை மணிமாலை    - கபிலதேவ நாயனார்


சிவபெருமான் திருஅந்தாதி                                  - கபிலதேவ நாயனார்


சிவபெருமான் திருவந்தாதி                                  -  பரணதேவ நாயனார்

சிவபெருமான் மும்மணிக்கோவை                  - இளம் பெருமான் அடிகள்

மூத்த பிள்ளையார் திருமும்மணிக்கோவை- அதிரா அடிகள்

கோயில் நான்மணிமாலை                                   - பட்டினத்துப் பிள்ளையார்

திருக்கழுமல மும்மணிக்கோவை                    - பட்டினத்துப் பிள்ளையார்


திருவிடை மருதூர் மும்மணிக்கோவை       - பட்டினத்துப் பிள்ளையார்


திருவேகம்பமுடையார் திருவந்தாதி               - பட்டினத்துப் பிள்ளையார்


திருவொற்றியூர் ஒருபா ஒருபது                       - பட்டினத்துப் பிள்ளையார்


திருநாரையூர் விநாயகர் திருஇரட்டை மணிமாலை - நம்பியாண்டார் நம்பி

கோயில் திருப்பண்ணியர் விருத்தம்               - நம்பியாண்டார் நம்பி


திருத் தொண்டர் திருவந்தாதி                             - நம்பியாண்டார் நம்பி


ஆளுடைய பிள்ளையார் திருவந்தாதி             - நம்பியாண்டார் நம்பி


ஆளுடைய பிள்ளையார் திருச்சண்பை விருத்தம் - நம்பியாண்டார் நம்பி


ஆளுடைய பிள்ளையார் திருமும்மணிக்கோவை  - நம்பியாண்டார் நம்பி


ஆளுடைய பிள்ளையார் திருவுலாமாலை   - நம்பியாண்டார் நம்பி


ஆளுடைய பிள்ளையார் திருக்கலம்பகம்     - நம்பியாண்டார் நம்பி


ஆளுடைய பிள்ளையார் திருத்தொகை          - நம்பியாண்டார் நம்பி


திருநாவுக்கரசர் திருஏகாதசமாலை                   - நம்பியாண்டார் நம்பி



12 பன்னிரண்டாம் திருமுறை

பெரியபுராணம்                                                              - சேக்கிழார் பெருமான்



திருமுறை பாடிய சான்றோர்கள்

வரிசை திருமுறையாசிரியர்         திருமுறை                     பாடல்கள்

1. திருஞான சம்பந்தர்                                1,2,3                             4147

2. திருநாவுக்கரசர்                                          4,5,6                           4066

3. சுந்தரர்                                                             7                                 1026

4. மாணிக்கவாசகர்                                        8                                 1058

5. திருமாளிகை தேவர்                                9                                 44

6. கண்டராதித்தர்                                             9                                10

7. வேணாட்டடிகள்                                         9                                10

8. சேதிராசர்                                                        9                                10

9. பூந்துருத்திநம்பி காடநம்பி                     9                               12

10. புருடோத்தமநம்பி                                     9                               22

11. திருவாலியமுதனார்                               9                                42
       
12. சேந்தனார்                                                     9                                47

13. கருவூர்த்தேவர்                                           9                               105

14. திருமூலர்                                                      10                              3000

15. திருவாலவாயுடையார்                           11                              1

16. கல்லாட தேவ நாயனார்                       11                             1

17. அதிரா அடிகள்                                             11                             23

18. ஐயடிகள் காடவர்கோன் நாயனார்    11                             24

19. இளம் பெருமான் அடிகள்                      11                             30

20. பரணதேவ நாயனார்                                 11                            101

21. சேரமான் பெருமான் நாயனார்           11                             11

22. கபிலதேவ நாயனார்                                 11                            157

23. காரைக்கால் அம்மையார்                      11                             143

24. பட்டினத்துப் பிள்ளையார்                       11                            192

25. நக்கீர தேவ நாயனார்                              11                             199

26. நம்பியாண்டார் நம்பி                                11                            382

27. சேக்கிழார்                                                       12                            4286

-------------------------------------------------------------------------------

சைவத் திருமுறைகள்

1, 2, 3: தேவாரம் திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்

4, 5, 6: தேவாரம் திருநாவுக்கரசு நாயனார்

7: தேவாரம் சுந்தரமூர்த்தி நாயனார்

8: திருவாசகம்,திருக்கோவையார் மாணிக்க வாசகர்

9: திருவிசைப்பா, திருப்பல்லாண்டு திருமாளிகைத்தேவர் உட்பட 9பேர்

10: திருமந்திரம் திருமூலர்

11: பிரபந்த மாலை (நூல்கள் 40) காரைக்கால் அம்மையார் உட்பட 12வர்

12: பெரியபுராணம் சேக்கிழார்

"http://ta.wikipedia.org/w/index.php?title=சைவத்_திருமுறைகள்&oldid=875931" இருந்து மீள்விக்கப்பட்டது

Saturday, June 16, 2012

தமிழ் வளர்த்த தருமையாதீனம் 6

                                                                          01 பதிப்புரை



திருப்பனந்தாள்

சிறீ காசிமடத்து அதிபர், கயிலை மாமுனிவர்

சீர்வளர்சீர் காசிவாசி முத்துக்குமாரசாமித் தம்பிரான் சுவாமிகள்.

திருச்சிற்றம்பலம்


"அண்ணல் ஆலவாய், நண்ணி னான்றனை
எண்ணி யேதொழத், திண்ணம் இன்பமே."

- ஞானசம்பந்தர்.


தமிழ் மக்களின் தவப்பயனாகத் தோன்றிய அருளாளர்கள் இருபத்தெழுவர் நமக்கு அளித்துள்ள ஞானக்கருவூலங்கள் பன்னிரு திருமுறைகள். இவை உலக வாழ்க்கையில் மக்கட்கு வேண்டும் நலங் களை அருளுவதோடு முடிவில் இறைவன் திருவடிப் பேற்றையும் நல்குவனவாகும். பன்னிரு திருமுறைகளைப் பக்தியோடு பாராயணம் செய்து நலம் பெறுமாறு நமது தருமை ஆதீன ஆதிபரமாசாரியர் ஷ்ரீகுருஞானசம்பந்தர் நமக்கு அறிவுறுத்துகின்றார். அப்பாடல்,


"ஆசையறாய் பாசம்விடாய் ஆனசிவ பூசைபண்ணாய்

நேசமுடன் ஐந்தெழுத்தை நீநினையாய் - சீ சீ

சினமே தவிராய் திருமுறைகள் ஓதாய்

மனமே உனக்கென்ன வாய்."


என்பதாகும். பன்னிரு திருமுறைகளில் ஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர் அருளிய முதல் 7 திருமுறைகள் தேவாரம் எனப்படும். தேவாரம் என்பதற்குத் தெய்வத்தைப் போற்றும் இசைப்பாடல்கள் என்பது பொருள் ஆகும்.

ஞானசம்பந்தரும் அப்பரும்:

ஞானசம்பந்தரும் அப்பரும் சமகாலத்தவர்கள். இவ்விருவர் காலமும் கி.பி. 7ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதியாகும். அந்நாளில் தமிழகத்தில் சமண, புத்த சமயங்கள் மேலோங்கிச் சைவம் நிலை குலைந்திருந்தது. தமிழ் நாட்டின் வடபகுதியில் மகேந்திரவர்ம பல்லவனும், தென்பகுதியில் நின்றசீர்நெடுமாற பாண்டியனும் சமண சமயம் சார்ந்து இருந்ததால் மக்களும் வேற்றுச்சமய நெறிகளை விரும்பத் தொடங்கியிருந்தனர். இறைவன் திருவருளால் இவ்விரு பெருமக்களும் தோன்றிச் சைவ சமயத்தைத் தமிழகத்தில் நிலைபெறச் செய்தனர்.


ஞானசம்பந்தர்:

ஞானசம்பந்தர் திருவவதாரத்தால் தமிழ் மொழி தழைத்தது. தமிழ்ச்சமய நெறியே உலகில் உயர்ந்தது என்பதை மக்கள் அறிந்து போற்றத் தொடங்கினர் எனக்கூறுகிறார் சேக்கிழார்.

அடங்கல் முறை:

மூவர் அருளிய தேவாரத் திருப்பதிகங்களைப் பண்முறை, தலமுறை, வரலாற்று முறை என மூவகையாக அடைவு செய்வர். இவை அடங்கல் முறை எனப்படும். அடங்கல் - தொகுப்பு. இவற்றுள் பண்முறையே நம்பியாண்டார் நம்பிகளால் தொகுக்கப்பெற்றது. இதுவே திருமுறை வரிசையில் ஒன்று இரண்டு முதலியனவாக எண்ணி யுரைக்கும் நிலையில் உள்ளது. நம்பிகள் ஞானசம்பந்தர் அருளிய தேவாரத் திருப்பதிகங்களை முதல் மூன்று திருமுறைகளாக அமைத்துத் தந்துள்ளார்.

முதல் திருமுறை:

இத்திருமுறையில் நட்டபாடை (22), தக்கராகம் (24), பழந்தக்கராகம் (16), தக்கேசி (12), குறிஞ்சி (29), வியாழக் குறிஞ்சி (25) மேகராகக் குறிஞ்சி (8) ஆகிய ஏழு பண்களில் 136 திருப் பதிகங்கள் அமைந்துள்ளன. இவற்றின் பாடல் எண்ணிக்கை 1469.

திருப்பதிகம்:

பதிகம் என்பதற்குப் பத்துப் பாடல்களைக் கொண்டது என்பது பொருள். பெரும்பாலானவை பத்துப்பாடல்களைக் கொண்டும் சில கூடியும் குறைந்தும் இருப்பினும் அவை பதிகம் எனவே பெயர் பெறும். ஞானசம்பந்தர் பதிகங்கள் பத்துப் பாடல்களுக்கு மேல், பயன்கூறும் திருக்கடைக்காப்புடன் பதினொரு பாடல்களைக் கொண்டதாய் விளங்குவன.


இத்திருமுறையில் அற்புதப் பதிகங்களாக விளங்குவன ஏழு. அவை ஞானப்பால் உண்டது, பொற்றாளம் பெற்றது, முயலகன் நோய் தீர்த்தது, பனிநோய் போக்கியது, மதுரை அனல் வாதத்தின்போது எரியில் இட்டது, ஆண்பனையைப் பெண்பனை ஆக்கியது, வாசி தீரக் காசு பெற்றது ஆகிய நிகழ்ச்சிகளை உள்ளடக்கியனவாகும்.


திருமுறைப் பதிப்பு:

'சில நூற்றாண்டுகளுக்கு முன், தஞ்சை மாவட்டம் வேதா ரணியத்திலும், திருநெல்வேலியிலும் வாழ்ந்த சிவநேயச் செல்வர்கள் ஆன தேசிகர்கள் பலர், தேவாரப் பதிகங்கள் முழுவதையும் பனை ஓலைச் சுவடிகளில் எழுதி மக்கள் பலருக்கும் கொடுத்து அதனால் பெறும் ஊதியங்கொண்டு வாழ்க்கையை நடத்தி வந்தனர். அவர்கள் வரைந்த ஓலைச் சுவடிகளே தமிழகத்திலும், யாழ்ப்பாணத்திலும் கிட்டும் சுவடிகளாகும். இச்சுவடிகளிடையே பாட பேதம் காண்டற்கு வாய்ப்பின்று' என மர்ரே கம்பெனி திரு. எஸ். ராஜம் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

பல நூற்றாண்டுகளாக ஓலைச் சுவடிகளிலிருந்த மூவர் தேவாரத் திருமுறைகளை, முதன் முதலில் காகித நூல்வடிவில் உலகுக்கு அளித்த பெருமை திருமயிலை சுப்பராய ஞானியார் அவர்களையே சாரும். திருஞானசம்பந்தர் அருளிய முதல் மூன்று திருமுறைகளை, திருவாவடுதுறை ஆதீனப் பிரதியை ஆதாரமாகக் கொண்டு, காஞ்சிபுரம் வித்துவான் சபாபதி முதலியார் அவர்களைக் கொண்டு ஆய்வு செய்வித்து, அப்பாவுப்பிள்ளை, நமச்சிவாய முதலியார் ஆகியோரின் பொருள் உதவியுடன், குமாரய்யர் அவர்களின் அச்சுக் கூடத்தில், ருத்ரோத்காரி ஆண்டு ஐப்பசித் திங்கள் (கி.பி. 1864)இல் பதிப்பித்து இவர் தமிழுலகிற்கு வழங்கினார்.

சுந்தரர் அருளிய ஏழாம் திருமுறையினை திருவாவடுதுறை ஆதீனப் பிரதியை அடிப்படையாகக் கொண்டு காஞ்சிபுரம் வித்துவான் சபாபதி முதலியார் அவர்களைக் கொண்டு ஆய்வு செய்வித்து, கலாநிதி அச்சுக் கூடத்திலும், சண்முக விலாச அச்சுக் கூடத்திலுமாக குரோதன ஆண்டு (கி.பி. 1865) பதிப்பித்து உதவி னார். திருஞானசம்பந்தர் தேவாரம் அச்சில் வெளிவந்த எட்டுத் திங்களுக்குள் சுந்தரர் தேவாரம் அச்சேறிவிட்டது.

திருநாவுக்கரசர் அருளிச்செய்த நான்கு, ஐந்து, ஆறு ஆகிய மூன்று திருமுறைகளையும் திருவாரூர்ச் செப்பேட்டின்படி பனை ஓலையில் எழுதுவித்துத் தருமை ஆதீனத்தில் இருந்த பிரதியை ஆதார மாகக் கொண்டு, சபாபதி முதலியார் அவர்கள் ஆய்வுடன், ஆதி நாராயணப் பிள்ளை அவர்கள் உதவியால் கலாநிதி அச்சுக்கூடத்தி லும், புட்பரத செட்டியாருடைய கலாரத்னாகர அச்சுக் கூடத்திலுமாக அக்ஷய ஆண்டு புரட்டாசித் திங்கள் (கி.பி. 1866) இல் பதிப்பித்து வெளியிட்டார். சுந்தரர் தேவாரம் வெளிவந்த பதினைந்து திங்களுக்குள் திருநாவுக்கரசர் தேவாரம் பதிப்பிக்கப் பெற்றது.

கி.பி. 1864-66 இல் மூவர் தேவாரமும் ஏழு திருமுறைகளாகப் பண்முறையில் மூன்று தனிநூல்களாக சுப்பராய ஞானியாரால், சபாபதி முதலியார் உதவியுடன் முதன் முதலில் அச்சுப் புத்தக வடிவில் தமிழுலகிற்கு வழங்கப் பெற்றன.

பண்முறை தேவாரப் பதிப்புக்களை சைவ நன்மக்கள் விரும்பி வாங்கியதால் பத்து ஆண்டுகளுக்குள் மறுபதிப்பு வெளிவர வேண்டிய தாயிற்று. அதனை அறிந்த சுப்பராய ஞானியார் பெருமகிழ்வு கொண் டார். கி.பி. 1864-66 இல் பதிப்பிக்கப் பெற்ற தேவார நூல்கள் எத்தனை பிரதிகள் அச்சிடப் பெற்றன என்று குறிப்பிடும் வழக்கம் இன்று வரை வெளிவந்துள்ள தேவாரப் பதிப்புக்களில் குறிப்பிடப்படவில்லை.


சைவ நன்மக்கள், மூவர் தேவாரத்திற்கும் தலமுறைப் பதிப்புக் கிட்டின் ஒருசேரப் பாராயணம் செய்யலாம் என்று எண்ணம் கொண்ட னர். அவ்வெண்ணம் ஈடேறும் வகையில் துறைசை ஆதீனம் மேலகரம் சீலத்திரு. சுப்பிரமணிய தேசிக சுவாமிகள் திருவுளப்பாங்கின் வண்ணம், பனசைக் காசிவாசி சிறீமத் இராமலிங்க சுவாமிகளின் ஆதரவோடு, துறைசை ஆதீன அப்பு ஓதுவார் ஓதின பண்ணின்படி மதுரை, துறைசை ஆதீனங்களில் கிடைத்த பிரதிகளை ஒப்பிட்டு மதுரை இராமசாமிப் பிள்ளை என்னும் ஞானசம்பந்தம் பிள்ளை சென்னை புஷ்பரத செட்டியாரின் கலாரத்தின அச்சுக் கூடத்தில் விஷு ஆண்டு (கி.பி. 1881) மார்கழித் திங்களில் தலமுறைத் தேவாரம் முழுவதையும் முதன்முறையாகப் பதிப்பித்து வழங்கினார்.

தலமுறைத் தேவாரத்தில் மக்கள் நாட்டம் கொள்ளவே தருமை ஆதீனம் 18 ஆவது குருமகா சந்நிதானம் தவத்திரு சிவஞான தேசிக மூர்த்திகள் ஆணையின் வண்ணம், திருப்பனந்தாள் காசிவாசி ஷ்ரீமத் சாமிநாத சுவாமிகள் ஆதரவுடன் திருமயிலை செந்தில்வேல் முதலியாரால் சென்னை விக்டோரியா ஜுபிலி அச்சுக்கூடத்தில் கி.பி. 1894 இலும், சென்னைக் கலாரத்நாகர அச்சுக் கூடத்தின் வாயிலாகக் கி.பி. 1905 இலும் அச்சிடப் பெற்றுத் தலமுறைத் தேவார அடங்கன் முறை வெளிவந்தது.

பண்முறைத் தேவாரம் மக்கட்குக் கிட்டாமையின், திரு வேங்கட நாயுடு அவர்களால் பார்வையிடப்பெற்றுச் சண்முக முதலியார் அவர்களால் சென்னை ஆறுமுக விலாச அச்சுக் கூடத்தில் கி.பி. 1898 இல் பண்முறைத் தேவார அடங்கன் முறை மூன்றாம் முறை யாக வெளியிடப் பெற்றது.


பத்தாண்டுகளுக்குள் மீண்டும் பண்முறைத் தேவார அடங்கன் முறை தேவை ஏற்பட, அது, திருமுறை வரலாறு, மூவர் சரித்திரக் குறிப்புரை முதலியவற்றுடன், திருமயிலை வித்துவான் சண்முகம் பிள்ளை அவர்களால் பார்வையிடப்பெற்று, எஸ். பி. ராஜாராம் அவர்களின் ஸன் ஆப் இந்தியா அச்சியந்திரசாலையில் அச்சிட்டு கி.பி. 1906 ஆம் ஆண்டு ஜுலைத் திங்களில் வெளிவந்தது.


இதனை மீண்டும் நமச்சிவாய முதலியார் கி.பி. 1917 ஆம் ஆண்டு நிரஞ்சன விலாச அச்சியந்திர சாலையில் வெளியிட்டார்.


பங்காளம் அப்புப் பிள்ளை அவர்கள் சென்னை நேஷனல் அச்சுக்கூடத்தின் வாயிலாக கி.பி. 1907 ஆம் ஆண்டு தேவாரப் பதிப்பொன்றை வழங்கினார்.

நாகலிங்க முதலியார், சென்னை ஆதிமூலம் செட்டியார் ஆகியோரால் கி.பி. 1908 இல் கலாரத்னாகர அச்சுக் கூடத்தில் சுந்தரர் தேவாரம் செய்யுள் முதற்குறிப்பு அகராதியுடன் வெளியிடப் பெற்றது. தேவாரத்தைப் பொறுத்தவரையில் இப்பதிப்பிலேயே அகராதியுடன் நூல் வெளியிடும் மரபு தொடங்கியது எனலாம்.


யாழ்ப்பாணத்து வண்ணைநகர்ச் சுவாமிநாத பண்டிதர் அவர்கள், பல்லாண்டுகள் திருமுறை ஏட்டுப் பிரதிகளை ஆய்வு செய்து, பாடபேதங்கள், புதிய பல செய்திகள் என்பவற்றுடன் சென்னை வித்தியாநுபாலன அச்சுக்கூட வாயிலாக வெளியிட்ட, தலமுறை மூவர் தேவார அடங்கன் முறைத் தொகுதி, கி.பி. 1911 ஆம் ஆண்டு மக்களுக்குக் கிட்டுவதாயிற்று.


சைவ நன்மக்கள் பொருள் உணர்வோடு தேவாரத்தைப் பயில வேண்டும் என்ற பெருங்கருணையால் காஞ்சிபுரம் மகா வித்துவான் ஷ்ரீமத் இராமானந்த யோகிகள் பண்முறையில் சுந்தரர் தேவாரத்திற்குப் பதவுரை, பொழிப்புரை, கருத்துரை, விசேடவுரை என்பனவற்றை வழங்கினார். இது கி.பி. 1913 இல் வெளிவந்தது. இவையே தேவாரம் பற்றிய பழைய பதிப்புக்களாம்.


சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் கயப்பாக்கம் சதாசிவச் செட்டியார் அவர்களைக் கொண்டு கி.பி. 1927 பிப்ரவரித் திங்கள் திருஞானசம்பந்தர் தேவாரத்தையும், கி.பி. 1928 பிப்ரவரித் திங்கள் திருநாவுக்கரசர் தேவாரத்தையும், கி.பி. 1929 ஏப்ரலில் சுந்தரர் தேவாரத்தையும் பண்முறையை ஒட்டி தனித்தனி நூல்களாக அச்சிட்டு வழங்கியது.

அடுத்து பண்முறைத்தேவாரப்பதிப்பு சைவசித்தாந்த சமாஜத்தினரால் அரும்பொருள் அகராதியுடன் கி.பி. 1929 - 1931 இல் மூன்று தொகுப்புக்களாக மிகக் குறைந்த விலையில் வெளியிடப் பெற்றன.


திருப்பனந்தாள் சீறீகாசி மடத்தின் சார்பில் தேவாரத் திரு முறைகள் பல பதிப்புக்களாக வெளியிடப் பெற்றுள்ளன.


திருவாவடுதுறை ஆதீனம் பண்முறையில் தேவாரத் திருமுறைகளை வெளியிட்டு உள்ளது.

திருமுறை உரைப் பதிப்பு:

இத்தகைய திருமுறைகள் அனைத்தையும் உரையோடு படித்துப் பொருள் உணர்ந்து ஓதினால் அவை நம் நெஞ்சில் நிலைத்து நின்று பயன் விளைக்கும் என்று திருவுளத்தெண்ணிய தருமை ஆதீனம் 25 ஆவது குருமகாசந்நிதானம் சீர்வளர்சீர் கயிலை சுப்பிரமணிய தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் பன்னிரு திருமுறைகளில் உரை இல்லாதவற்றுக்கும் உரை எழுதச் செய்து ஆதீனப் பதிப்பாக அவற்றை வெளியிடவேண்டும் என்று திருவுளம் பற்றினார்கள்.


தக்க தமிழறிஞர்களைக் கொண்டு உரை எழுதச்செய்து ஆதீன வெளியீடுகளாக அவற்றை 1953 ஆம் ஆண்டு முதல் வெளியிட்டு வந்தார்கள். சீர்வளர்சீர் கயிலைக்குருமணி அவர்கள் அருளாட்சிக் காலத்தில் 9 திருமுறைகள் வரை உரையுடன் வெளியிடப் பெற்றன. சமய உலகம் இவ்வுரைகளைப் போற்றிப் பாராட்டியது.

1971ல் சீர்வளர்சீர் கயிலைக் குருமணி அவர்கள் பரிபூரணம் அடைந்தபின் அவர்கள் தொடங்கிய திருமுறை வெளியீட்டுப் பணியை தருமை ஆதீனம் 26 ஆவது குருமகாசந்நிதானம் அவர்கள் 1974, 1984, 1995ஆம் ஆண்டுகளில் பத்தாம் திருமுறையாகிய திரு மூலர் திருமந்திரத்தை உரையோடு மூன்று தொகுதிகளாக வெளியிட்டு அருளினார்கள்.


1995 ஆம் ஆண்டிலேயே பதினொன்றாம் திருமுறையும் வெளியிடப் பெற்றது. பன்னிரண்டாம் திருமுறை வெளியிடப் பெறுவதற்குரிய வகையில் உரை எழுதுவிக்கப் பெற்று வந்தது.

பல திருமுறைகளும் விற்பனையான நிலையில் அவை ஒருசேர அன்பர்கட்குக் கிடைக்க இயலாததால் அன்பர்கள் அவற்றை ஒருசேர அச்சிட்டு வழங்கியருளுமாறு கேட்டுக்கொண்டனர்.

சீர்வளர்சீர் குருமகாசந்நிதானம் அவர்கள் பெருங்கருணை யோடு பன்னிரு திருமுறைகளையும், பதினாறு தொகுதிகளாக ஒரு சேர ஒளியச்சில் பதிப்பித்து, சீர்வளர்சீர் கயிலைக்குருமணி அவர்கள் திரு வுளத்து எண்ணியவாறு தில்லையில் வெளியிடத் திருவுளம் பற்றி னார்கள்.


1,2,11 ஆகிய திருமுறைகளை ஆதீனச் செலவிலேயே வெளியிடலாம் எனவும், ஏனையவற்றை அன்பர்கள் அளிக்கும் நன்கொடை களைக் கொண்டும் வெளியிடத் திருவுளம் கொண்டார்கள். சீர்வளர்சீர் குருமகாசந்நிதானம் திருவுளத்தெண்ணியபடி பலரும் இத்திருமுறைப் பதிப்புக்களை வெளியிடும் பொறுப்பை ஏற்றனர்.


இத்திருமுறைப் பதிப்புக்களைச் செம்மையான முறையில் அச்சிட்டு வழங்கும் பொறுப்பைச் சென்னை-யாழ்ப்பாணம் காந்தளகம் உரிமையாளர், மறவன்புலவு திரு. க. சச்சிதானந்தன் அவர்கள் ஆர்வத்தோடும் பக்தி உணர்வோடும் ஏற்று நன்முறையில் நிறைவேற்றியுள்ளார்.


பன்னிரு திருமுறைகளில் இம்முதல் திருமுறைக்கு, தருமை ஆதீனப் புலவர் பத்மபூஷண் மகாவித்துவான், முனைவர், திரு ச. தண்டபாணி தேசிகர் அவர்கள் எழுதிய குறிப்புரை, விசேட உரைகளோடு , ஆதீனப் புலவர், வித்துவான், திரு. வி.சா. குருசாமி தேசிகர் அவர்கள் எழுதிய பொழிப்புரையும் சேர்க்கப் பெற்றுள்ளது.


புதுச்சேரி, பிரெஞ்சு இந்தியக் கலை நிறுவனம், ஆய்வறிஞர், பேராசிரியர் திரு. தி. வே. கோபாலய்யர் அவர்கள் இம் முதல் திருமுறையின் உரைத்திறம் பற்றி எழுதியுள்ளார்.


சைவ மெய்யன்பர்கள் சீர்வளர்சீர் குருமகா சந்நிதானத்தின் பெருங்கருணையைப் போற்றி இத்தொகுதியைப் பெற்று, ஓதி உணர்ந்து பயன் எய்துவார்களாக.