Thursday, June 14, 2012

தருமை ஆதீனம் இயற்றிவரும் பணிகள்

                                                                        உ

                         
                             
                          தருமை ஆதீனம் இயற்றிவரும் பணிகள்

1. தேவாரப் பாடசாலை நிறுவித் தெய்வத் தமிழ் வளர்ப்பது.

2. வேத சிவாகம பாடசலை வைத்துத் திருக்கோயில் பூசை முறைகளைப் பயிற்றுவிப்பது.

3. திருமுறைகள், சித்தாந்த சாத்திரங்கள், சைவ சமய நூல்கள் பலவற்றைத் தெளிவுற அச்சிட்டு வழங்குவது.

4. தேவாரத் தலங்கள் தோறும் வழிபாடுகள் நிகழ்த்தி அவ்வத்தலத் தேவாரத்தைப் புராண வரலாறுகளுடன் அச்சிட்டு வழங்குவது.

5. ஆலயங்கள் பலவற்றிலும் நிகழும் பெருவிழாக்களில் சமய விரிவுரைகள், மாநாடுகள் நிகழ்த்திச் சமய தத்துவங்களை மக்கட்கு உணர்த்துவது.

6. தொடக்கப்பள்ளி, உயர்நிலைப் பள்ளி, கலைக்கல்லூரி அமைத்து மாணவர்களுக்குக் கல்வி நலம் தருவது.

7. அனைத்துலக சைவசித்தாந்த ஆராய்ச்சி மையம் நிறுவி அதன் வாயிலாகக் கடல் கடந்த நாடுகளிலும் நம் நாட்டிலும் வாழும் சமயம் சார்ந்த மக்கட்குச் சைவசமயப் பெருமைகளை அறிவுறுத்துவதோடு சென்னை, திருச்சி, நெல்லை ஆகிய இடங்களில் மாலை நேரக் கல்லூரி நடத்தி வருவது.

8. உயர்நிலைப் பள்ளிகள் கலைக்கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் தமிழ் மொழியை ஊக்கத்தோடு பயிலப் பரிசுகள் வழங்குவது.

9. ஞானசம்பந்தம் என்னும் மாத இதழ் நடத்தி அதன் வாயிலாக மக்கட்குச் சமய உண்மைகளை உணர்த்தி வருவது.

10. ஆதீனத்தின் அருளாட்சியிலுள்ள 27 திருக்கோயில்களையும் தூய்மையாகப் பரிபாலித்து நாள்வழிபாடு சிறப்புவழிபாடுகள் நிகழ்த்திவருவது.

11. ஆதீனக் கோயில்கள் பலவற்றில் நூலகங்கள் அமைத்தும் மாலைநேரத்தில் ஓதுவாமூர்த்திகளைக் கொண்டு குழந்தைகட்குத் திருமுறை வகுப்புக்கள் நடத்தியும் உதவுவது.


12. சமய நூல்களை ஆய்வு நோக்கோடு எழுதி வெளியிட முன்வருவோர்க்கு உதவுவது.

13. ஆதீனத்திருக்கோயில்களில் பழுதடைந்த கட்டிடப் பகுதிகளை இடித்துப் புதுப்பித்தும் 12 ஆண்டுகட்கு ஒருமுறை மூர்த்திகட்கு அஷ்டபந்தனம் சாத்தியும் திருக்குட நீராட்டு விழா நடத்துவது.

14. ஆதீனத் திருமடத்தில் பெரியதொரு நூலகம் அமைத்துப் பழைமையான ஓலைச்சுவடிகளையும் நூல்களையும் பேணி வருவது.

15. கல்வி பயிலும் ஏழை மாணவர்கட்குக் கல்விக் கட்டணம் புத்தகங்கள் வழங்கி உதவுவது.

16. மயிலாடுதுறையில் மகப்பேறு மருத்துவ நிலையம் அமைத்து நகராட்சிக்கு உதவியதுபோலச் சிங்கிப்பட்டி காசநோய் மருத்துவமனை சென்னை அடையாறு கான்சர் இன்ஸ்டியூட் போன்ற பொது நிறுவனங்களுக்கும் பெருந்தொகை உதவி வருவது.


17. ஆதீனக் குரு முதல்வர் குரு பூசைவிழாவில் சமய வகுப்புக்கள் கருத்தரங்குகள் திருநெறிய தெய்வத் தமிழ் மாநாடு முதலியன நடத்திவருவது.


18. அவ்வப்போது மக்கட்கு எல்லாச் சமய தத்துவங்களையும் மாநாடுகள் மூலம் உணர்த்திப் பொதுவாக அனைத்துச் சமய தத்துவங்களையும் மக்கள் அறியும்படிச் செய்வது.

19. தமிழ்நாட்டின் தலைநகராகிய சென்னையில் சமயப் பிரசார நிலையம் அமைத்துச் சமய வகுப்புக்கள் நடத்தியும், ஆதீனத்திருக் கோயில்களில் நிகழும் சிறப்பு விழாக்களின் பிரசாதங்களை அங்குள்ள மக்கட்கு வழங்கியும் வருவது.


20. திங்கள் தோறும் முதல் ஞாயிற்றுக் கிழமைகளில் ஸ்ரீலஸ்ரீ குருமகாசந்நிதானம் பொதுமக்கட்கு அருளாசி வழங்குவது.

21. திருவாமூரில் அப்பருக்குத் திருக்கோயில் எடுப்பித்துத்
திங்கள்தோறும் திருமுறைமுற்றோதல், விரிவுரை நிகழ்த்தியும் ஆண்டுதோறும் குருபூசையைச் சிறப்புற நடத்தியும் வருவது.


22. பெண்ணாகடத்தில் மெய்கண்டாருக்குக் கோயில் எடுத்து ஆண்டுதோறும் குருபூசையைச் சிறப்புற நடத்துவது.

23. சித்தர் காட்டில் ஸ்ரீ சிற்றம்பல நாடிகள் கோயில் திருப்பணி செய்து கும்பாபிஷேகம் நிகழ்த்தி, சமயச்சொற்பொழிவு, ஆண்டுதோறும் குருபூஜை நடத்தி வருவது.

24. சீகாழியில் திருமுலைப்பால் விழாவிலும், திருவாமூரில் சதய விழாவிலும் திருமுறை இசைவாணர்கட்குத் திருமுறைக் கலாநிதி பட்டம் பொறித்த பொற்பதக்கமும் ஆயிரம் ரூபாய் பணமுடிப்பும் வழங்கிவருவது.

25. ஆதீனச் சிறப்பு விழாவாகிய ஆவணி மூல நாளில் பழுத்த தமிழ்ப்புலமை பாலித்த தமிழறிஞர்க்குச் சிறப்புப் பட்டம் வழங்கி வருவது.

26. சிதம்பரம் திருக்கோயிலில் சமயாசாரியர்களோடு சந்தானாசாரியரைப் பிரதிட்டை செய்வித்து அஷ்டபந்தன மகாகும்பாபிஷேகம் நிகழ்த்தியதுடன் ஆண்டுதோறும் குருபூசை விழாக்களைக் கொண்டாடி வருவது.

27. இல்லங்கள் தோறும் திருமுறை முற்றோதல் செய்விப்பது.

28. சிவராத்திரி கார்த்திகைச் சோமவாரம் போன்ற நாள்களில் அன்பர்கட்குச் சமய விசேடதீட்சைகள் அளிப்பது.

29. மதுரையில் உள்ள ஸ்ரீலஸ்ரீ குருஞானசம்பந்தர் திருமடத்தில் அவ்வப்போது சமயச் சொற்பொழிவுகள் நடத்தி வருவது.

30. ஆதீன ஆலயங்களுக்கு மட்டும் அன்றிப் பிற ஆலயங்களுக்கும் திருப்பணி நிதி உதவி அளித்தல் - யாகசாலைச் செலவை ஏற்று நடத்துதல் முதலியன செய்து வருவது.

31. திருநாரையூர்ப் பொல்லாப் பிள்ளையார் கோயில் நம்பி ஆண்டார் நம்பிகள் குருபூஜை விழாவை நடத்துவது.

32. ஸ்ரீ குருஞானசம்பந்தர் பணி மன்றம் நிறுவி அதன் வாயிலாக மயிலாடுதுறையில் மழலையர்பள்ளி, செகண்டரிப் பள்ளி ஆகியன நடத்துவதோடு பிற ஊர்களிலும் இம்மன்றச் சார்பில் பள்ளிகள் மருத்துவ நிலையங்கள் அமைத்துச் சமூகத் தொண்டுகள் முதலியன செய்து வருவது.



* * * * *


வாழ்த்து

வையம் நீடுக மாமழை மன்னுக

மெய் விரும்பிய அன்பர் விளங்குக

சைவ நன்னெறி தான்தழைத் தோங்குக

தெய்வ வெண்திரு நீறு சிறக்கவே.

- பெரிய புராணம்.



வான்முகில் வழாது பெய்க

மலிவளம் சுரக்க மன்னன்

கோன்முறை அரசு செய்க

குறைவிலாது உயிர்கள் வாழ்க

நான்மறை அறங்கள் ஓங்க

நற்றவம் வேள்வி மல்க

மேன்மைகொள் சைவ நீதி

விளங்குக உலக மெல்லாம்.

- கந்தபுராணம்.


மல்குக வேத வேள்வி வழங்குக சுரந்து வானம்

பல்குக வளங்கள் எங்கும் பரவுக அறங்கள் இன்பம்

நல்குக உயிர்கட் கெல்லாம் நான்மறைச் சைவம் ஓங்கிப்

புல்குக உயிர்கட் கெல்லாம் புரவலன் செங்கோல் வாழ்க.

- திருவிளையாடற் புராணம்.



திருவார் கமலைப் பதிவாழ்க அப்பதி

சேரும்நின்றன்

மருவார் மரபும் திருநீறும் கண்டியும்

வாழ்கஅருட்

குருவாகும் நின்றன் திருக்கூட்டம் வாழ்கநற்

கோநிரைகள்

தெருவாழ் தருமைத் திருஞான சம்பந்த


தேசிகனே.


- ஆதீன அருள் நூல்.

Wednesday, June 13, 2012

தமிழ் வளர்த்த தருமையாதீனம் 4

தமிழ்மணி - அருள்நெறித் தமிழ் வளர்த்த அடிகளார்


சேதுபதி



"அடிகளார்" என்பது துறவியைக் குறிக்கும் ஒரு பழந்தமிழ்ச் சொல். எனினும், அப்பெயர் தவத்திரு குன்றக்குடி அடிகளார் ஒருவரையே குறிக்கும் சிறப்புப் பெயரானது தனி வரலாறு.

தமிழகத்துத் தஞ்சைத் தரணியில் மயிலாடுதுறையை அடுத்துள்ள திருவாளப்புத்தூருக்கு அருகிலுள்ள நடுத்திட்டு என்னும் கிராமத்தில் சீனிவாசப் பிள்ளை - சொர்ணத்தம்மாள் தம்பதிக்கு, 1925ஆம் ஆண்டு ஜூலை 11ஆம் தேதி பிறந்தார். இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் அரங்கநாதன். அவருக்கு முந்திப் பிறந்த சகோதரர் இருவர்; சகோதரி ஒருவர்.

அப்போது அவன், நான்காம் வகுப்பு பயிலும் சிறுவன். வழக்கறிஞரும், தமிழ்ப்பேராசிரியருமான "சொல்லின் செல்வர்" இரா.பி.சேதுப்பிள்ளையின் வீட்டில், அவரது அறையின் ஜன்னல் முன் நின்று தினம் ஒரு திருக்குறள் ஒப்பித்துக் காலணா பெறுவது அரங்கநாதனின் வழக்கம். இவ்வாறு அரங்கநாதனின் வாழ்வை உயர்த்திய திருக்குறள், பின்னாளில் அடிகளாரான அவருக்குப் பொதுநெறி ஆகியது. இதே போல, அரங்கநாதனின் பிஞ்சு உள்ளத்தில் தீண்டாமை விலக்கு உணர்வும், மனிதநேயப் பண்பும் குறிக்கோள்களாகப் பதியக் காரணமானவர் அருள்திரு விபுலானந்த அடிகள் ஆவார்.


பள்ளி இறுதி வகுப்புவரை படித்த அரங்கநாதன், தருமபுர ஆதீனத்தில் கணக்கர் வேலை இருப்பதை அறிந்து 1944ஆம் ஆண்டு அப்பணியில் சேர்ந்தான். 1945 - 48 கால இடைவெளியில் முறைப்படி தமிழ் கற்று வித்துவான் ஆனதும் அங்கேதான். அத்திருமடத்தின் 25ஆவது பட்டமாக வீற்றிருந்த தவத்திரு சுப்பிரமணிய தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், அரங்கநாதனைத் துறவுக்கு ஆட்படுத்திக் கந்தசாமித் தம்பிரான் ஆக்கினார்கள்.


1945ஆம் ஆண்டு தருமபுர ஆதீனத்தின் கட்டளைத் தம்பிரானாக நியமனம் பெற்ற கந்தசாமித் தம்பிரான், சமயம் தொடர்பான பல பணிகளைத் திறம்பட ஆற்றினார். அவர் தருமையாதீனத்தின் சார்பில், குன்றக்குடித் திருவண்ணாமலை ஆதீன குருபூஜை விழாவொன்றில் பங்கேற்றுச் சொற்பொழிவாற்ற நேர்ந்தது. கந்தசாமித் தம்பிரானின் நாவன்மையால் கவரப்பட்ட குன்றக்குடித் திருமட ஆதீனகர்த்தர் திருப்பெருந்திரு ஆறுமுக தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் முறைப்படி தருமையாதீனத்திடம் இசைவுபெற்றுத் தமது திருமடத்துக்கு ஆதீன இளவரசராகக் கந்தசாமித் தம்பிரானை ஆக்கினார்.


அப்போது தெய்வசிகாமணி "அருணாசல தேசிக பரமாச்சாரிய சுவாமிகள்" என்ற திருப்பெயரும் அவருக்குச் சூட்டப்பட்டது.


1949ஆம் ஆண்டு செப்டம்பர் 5ஆம் தேதி ஆதீன இளவரசராகிய அவர், 1952 ஜூன் 16ஆம் தேதி முதல் அத்திருமடத்தின் தலைமைப் பொறுப்பேற்று, 45ஆவது குருமகா சந்நிதானமாக விளங்கினார். பின்னர் தம் பணிகளால், அடிகளார் ஆகி, ஊர்ப்பெயர் இணைய, "குன்றக்குடி அடிகளார்" என்று மக்களால் சிறப்புடன் அழைக்கப்பட்டார். தவத்திரு அடிகளார் ஆதீனப் பொறுப்பேற்ற காலம், இந்து மதத்திற்கு மிகவும் சோதனையான காலம். இறைமறுப்புப் பிரசாரங்களால் தாக்குதலுக்கும், கண்டனத்துக்கும் உரியதாக இந்து மதம் ஆயிற்று. இதன் எதிர்கால விபரீதங்களை மனதில் எண்ணிய அடிகளார், காலத்திற்கேற்ப, இந்து மதத்தின் உன்னத சீலங்களைப் புரியவைக்கும் முயற்சியில் இறங்கினார். இதன்பொருட்டு 1952 ஆகஸ்ட் 11ஆம் தேதி சமயச் சான்றோர்களையும், பெருந் தமிழறிஞர்களையும் குன்றக்குடியில் ஒன்றுதிரட்டிப் பெரும் மாநாடு ஒன்றை நடத்தினார். அதன்விளைவாகத் தோன்றியதே "அருள்நெறித் திருக்கூட்டம்".


1954 ஜூலை 10ஆம் தேதி இதன் முதல் மாநாடு தேவகோட்டையில் மூதறிஞர் இராஜாஜி தலைமையில் நடைபெற்றது. பின்னர் முழு வீச்சோடு செயல்பட்ட இவ்வியக்கத்தின் கிளைகள் தமிழகம் மட்டுமல்லாது, இலங்கையிலும் கிளைத்தன. அதன் செயலாக்கப்பிரிவாக "அருள்நெறித் திருப்பணி மன்றம்" எனும் அமைப்பும் 1955 ஜூன் 10ஆம் தேதி கிளைத்தது. அப்போதைய தமிழக அரசின் துணையோடு தமிழ்நாடு "தெய்வீகப் பேரவை" எனும் அமைப்பு, 1966இல் முகிழ்த்தது. தருமை ஆதீன குருமகா சந்நிதானம் தலைமையேற்ற இப்பேரவையில் அவருக்குப்பின், 1969 முதல் 1976 வரை அடிகளார் தலைமையேற்று அரும்பணிகள் பல ஆற்றினார்.


பேச்சுக்கு நிகராக, எழுத்திலும் வல்லவரான அடிகளார், தம் வாழ்நாளில் ஏராளமான நூல்களை எழுதியதோடு,



மணிமொழி

தமிழகம்

அருளோசை

முதலிய இதழ்களையும் நடத்தினார்.


அவர் தோற்றுவித்து, இன்றளவும் வந்துகொண்டிருக்கும் "மக்கள் சிந்தனை"யும், "அறிக அறிவியல்" இதழும் குறிப்பிடத்தக்கன.


தமது சமய, சமுதாயப் பணிகள் மூலம் உலகை வலம்வந்த மகாசந்நிதானம், அடிகளார் ஒருவர்தாம்.

வெளிநாடுகள் பலவற்றுக்கும் சென்று வந்தார் அடிகளார். அவர் மேற்கொண்ட அந்த மேலைநாட்டுப் பயணங்கள், அவரைத் தமிழ்நாட்டின் பண்பாட்டுத் தூதுவராகவும், அங்குள்ள தமிழ் மக்களின் வளர்ச்சிக்குத் துணைபுரிபவராகவும் ஆக்கின. இவ்வாறு, அவர் 1972இல் சோவியத்தில் மேற்கொண்ட பயணத்தின் விளைவாக தோன்றியது தான் "குன்றக்குடி கிராமத்திட்டம்".


திருக்குறளின் ஆழத்தையும், அழகையும், செறிவையும் உள்வாங்கிய அடிகளாரின் எழுத்துகள் தமிழ் இலக்கிய உலகில் தனித்தன்மை கொண்டமைவன.

திருவள்ளுவர்

திருவள்ளுவர் காட்டும் அரசியல்

திருவள்ளுவர் காட்டும் அரசு

குறட்செல்வம்

வாக்காளர்களுக்கு வள்ளுவர் தொடர்பான அறிவுரை

திருக்குறள் பேசுகிறது

குறள்நூறு

ஆகியன அடிகளார் அருளிய திருக்குறள் தொடர்பான நூல்களாகும்.



சமய இலக்கியத்திற்கு அடிகளார் அளித்த கொடைகளாக அமைவன,

அப்பர் விருந்து

அப்பர் சுந்தரர் மாணிக்கவாசகர்

திருவாசகத்தேன்

தமிழமுது

சமய இலக்கியங்கள்

நாயன்மார் அடிச்சுவட்டில்

உள்ளிட்ட நூல்களாகும்.


ஆலய சமுதாய மையங்கள் என்னும் நூல், தமிழக அரசின் முதற்பரிசு பெற்ற நூல்.


அந்த வரிசையில் வைத்துப் போற்றத்தக்க நூல், "நமது நிலையில் சமயம் சமுதாயம்".


சமரச சமய நெறியாளர்களுக்கு உரிய ஆன்மிக இலக்கியமாக அடிகளார் அருளிய "திருவருட்சிந்தனை". நாள் வழிபாட்டுக்குரிய "தினசரி தியான நூல்".



பெரியபுராணத்தோடு, சிலப்பதிகாரத்தையும், கம்பராமாயணத்தையும் ஆராய்ந்து அடிகளார் எழுதிய நூல்கள்,


சிலம்பு நெறி

கம்பன் கண்ட ஆட்சியில் அரசியல் சமூகம்

ஆகியனவாகும்.

சங்க, சமய இலக்கியங்களோடு நின்றுவிடாமல் சமகால இலக்கியத்திலும் ஆழ்ந்த புலமையுடைய அடிகளார், "பாரதி யுக சந்தி", "பாரதிதாசனின் உலகம்" ஆகிய நூல்களையும் எழுதியுள்ளார்.


அவர்தம் சிறுகதைகள், அறிவொளி இயக்கத்தின் மூலமாக மக்களைச் சென்றெய்தியது. அதுபோல் அடிகளார் அரங்கத்தலைமையேற்றுப் பாடிய கவிதைகள், "கவியரங்கில் அடிகளார்" என்னும் நூலாகியிருக்கிறது.


அவர்தம் சுயசரிதையென அமைவது, "மண்ணும் மனிதர்களும்" எனும் நூலாகும். சில நாடகங்களும் அடிகளாரால் எழுதப்பெற்று அரங்கேற்றம் ஆகியிருக்கின்றன.


சிறுபொழுதும் ஓய்வின்றி, உலக நலனுக்காகத் துடித்த அடிகளாரின் இதயம் 1995ஆம் ஆண்டு ஏப்ரல் 15ஆம் தேதி தமது துடிப்பை நிறுத்திக்கொண்டது. ஆயினும் அவர் ஆற்றிய அருட்பணிகள், தொடங்கிய தூய இயக்கங்கள் இன்னும் தொடர்ந்து விரிந்து வளர்கின்றன. அவர்தம் நிறைவுக் காலத்தில் "தினமணி"யில் தொடராக வெளிவந்த "எங்கே போகிறோம்?" என்ற கட்டுரைகள் இன்றைக்கும் வழி காட்டுவன!


நன்றி:- தினமணி

தமிழ் வளர்த்த தருமையாதீனம் 3

சிதம்பர மும்மணிக்கோவை  - (ஸ்ரீகுமர குருபரர் நூல்கள்)


குமரகுருபரர் தருமையாதீனக் குருமகா சந்நிதானம் விடுத்த கட்டளையின் வண்ணம் தில்லைத் திருத்தலத்தில் தங்கியிருந்த போது கூத்தப்பெருமான் தமக்கு அளித்த அருளியல் துய்ப்பு அநுபவத்தை எடுத்து விளக்கும் வகையில் அருளிய நூல் சிதம்பர மும்மணிக்கோவை.


காப்பு

செம்மணிக்கோ வைக்கதிர்சூழ் தில்லைச்சிற் றம்பலவன்

மும்மணிக்கோ வைக்குவந்து முன்னிற்கும் - எம்மணிக்கோ

அஞ்சக் கரக்கற்ப கத்தா ரிறைஞ்சுமஞ்சு

கஞ்சக் கரக்கற்ப கம். 1



நூல்

நேரிசையாசிரியப்பா

பூமலி கற்பகப் புத்தேள் வைப்பும்

நாமநீர் வரைப்பி னானில வளாகமும்

ஏனைப் புவனமு மெண்ணீங் குயிரும்

தானே வகுத்ததுன் றமருகக் கரமே

தனித்தனி வகுத்த சராசரப் பகுதி

அனைத்தையுங் காப்பதுன் னமைத்தபொற் கரமே

தோற்றுபு நின்றவத் தொல்லுல கடங்கலும்

மாற்றுவ தாரழல் வைத்ததோர் கரமே

ஈட்டிய வினைப்பய னெவற்றையு மறைத்துநின்

றூட்டுவ தாகுநின் னூன்றிய பதமே

அடுத்தவின் னுயிர்கட் களவில்பே ரின்பம்

கொடுப்பது முதல்வநின் குஞ்சித பதமே

இத்தொழி லைந்துநின் மெய்த்தொழி லாகப்

பாலுண் குழவி பசுங்குடர் பொறாதென

நோயுண் மருந்து தாயுண் டாங்கு

மன்னுயிர்த் தொகுதிக் கின்னருள் கிடைப்ப

வையமீன் றளித்த தெய்வக் கற்பின்

அருள்சூற் கொண்ட வையரித் தடங்கட்

டிருமாண் சாயற் றிருந்திழை காணச்

சிற்சபை பொலியத் திருநடம் புரியும்

அற்புதக் கூத்தநின் னமுதவாக் களித்த

நல்லற நூல்களிற் சொல்லறம் பலசில

இல்லறந் துறவற்ற மெனச்சிறந் தனவே

அந்நிலை யிரண்டினுண் முன்னது கிளப்பிற்

கற்றநூற் றுறைபோய்க் கடிமனைக் கிழவன்

நற்குண நிறைந்த கற்புடை மனைவியோ

டன்பு மருளுந் தாங்கி யின்சொலின்

விருந்து புறந்தந் தருந்தவர்ப் பேணி

ஐவகை வேள்வியு மாற்றி யிவ்வகை

நல்லற நிரப்பிப் பல்புகழ் நிறீஇப்

பிறன்மனை நயவா னறன்மனை வாழ்க்கைக்கு

வரையா நாளின் மகப்பேறு குறித்துப்

பெருநலந் துய்க்கும் பெற்றித் தன்றே

மற்றையது கிளப்பின் மனையற நிரப்பி

முற்றுணர் கேள்வியின் முதுக்குறை வெய்திப்

பொருளு மின்பமு மொரீஇ யருளொடு

பொறையு மாற்றலு நிறைபே ரொழுக்கமும்

வாய்மையுந் தவமுந் தூய்மையுந் தழீஇ

ஓரறி வுயிர்க்கு முறுதுய ரோம்பிக்

காலோய் நடைய னாகித் தோலுடுத்

தென்பெழு மியாக்கையன் றுன்புறத் துளங்காது

வரையுங் கானு மெய்திச் சருகொடு

கானீ ரருந்திக் கடும்பனிக் காலத்து

மாநீ ரழுவத் தழுங்கி வேனில்

ஐவகை யழலின் மெய்வருந்த வருந்தி

இவ்வகை யொழுகு மியல்பிற் றன்றே, அதனால்

இந்நிலை யிரண்டு மெம்மனோர்க் கியலா

நன்னிலை யாகலி னந்நிலை நிற்றற்

குரனு மாற்றலு மின்றி வெருவந்

தௌிதனற் றமியனே னரியது பெறுதற்

குளதோ நெறியொன் றுணர்த்துமி னீரென

முத்தலந் தலங்களுண் முத்தித் தலமா

இத்தல முடைத்தெனெ விசைத்தனர் சிலரே

அறிஞராங் குரைத்த வுறுதிக் கட்டுரை

உலகியல் வழக்கும் புலனெறி வழக்குமென்

றிருவகை வழக்கினு நிலைபெற் றன்றே, அவற்றுள்

ஆரூர்ப் பிறத்த னேர்படி னல்லது

செயற்கையி னெய்து மியற்கைய தன்றே, அதாஅன்று

காசியி லிறத்த னோக்கித் தேசம்விட்

டறந்தலைத் தந்த வரும்பொரு டாங்கிப்

பிறன்பொருள் கொள்ளாப் பேரறம் பூண்டு

கழிபெருங் கான நீங்கி வழியிடைத்

தீப்பசிக் கிரங்கி நோய்ப்பனிக் கொதுங்கிப்

பல்பிணிக் குடைந்து செல்லுங் காலத்

திடைச்சுரத் திறவா தின்னுயிர் தாங்கிக்

கிடைத்தன னாயி னடுத்தநல் லொழுக்கமோ

டுடல்விடு காறுமத் தடநகர் வைகி

முடிவது கடைபோக முடிவதோ வரிதே, அதனால்

சிற்றுயிர்க் கிரங்கும் பெரும்பற்றப் புலியூர்

உற்றநின் றிருக்கூத் தொருகா னோக்கிப்

பரகதி பெறுவான் றிருமுன் பெய்தப்

பெற்றன னளியனேன் பற்றில னாயினும்

அன்பிலை கொடியையென் றருளா யல்லை

நின்பதம் வழங்குதி நிமலவென் றனக்கே

மருந்துண் வேட்கையன் மனமகிழ்ந் துண்ணினும்

அருந்துழி யொருவ னருவருப் புறீஇத்

தன்முகஞ் சுளித்துத் தலைநடுக் குற்றுக்

கண்ணீர் வீழ்த்துக் கலுழ்ந்தனன் மாந்தினும்

வாய்ப்புகு மாயினம் மருந்திரு வருக்கும்

தீப்பிணி மாற்றுத றிண்ணமே யன்றி

நொதுமலும் பகையும் போக்கி யொருபொருள்

விழுத்தகு கேண்மையோர்க் குதவல்

வழக்குமன் றைய மன்றுடை யோர்க்கே. 2



நேரிசைவெண்பா

மன்றம் பொகுட்டா மதிலிதழா மாடங்கள்

துன்றும் புயல்கள் சுரும்பராப் - பொன்றங்கும்

நற்புண்ட ரீகமே யொக்கு நடராசன்

பொற்புண்ட ரீக புரம் 3



கட்டளைக்கலித்துறை

புரமொன் றிரண்டும் புகையழ லுண்ணப் புவனமுண்ணும்

சரமொன் றகிலஞ் சலிக்கவெய் தோய்சலி யாநடஞ்செய்

வரமொன் றிரண்டு மலர்த்தாளு மூன்றிற்றன் மாமகுடம்

பரமொன்று மென்றுகொல் லோகொண் டவாவப் பதஞ்சலியே 4




நேரிசையாசிரியப்பா



சலியாது முயன்ற தவப்பெருந் தொண்டர்

பலநா ளோதிக் கலைமுற்று நிரம்பி

அளவையி னளந்துகொண் டுத்தியிற் றௌிந்து

செம்பொரு ளிதுவெனத் தேறி யம்பலத்

தாரா வன்பினோ டகனமர்ந் திறைஞ்சிப்

பேரா வியற்கை பெற்றனர் யானே

சரியையிற் சரியாது கிரியையிற் றளரா

தியோகத் துணங்கா தொண்பொரு டூக்காது

வறிதே நின்றிரு மன்ற நோக்கிப்

பிறவா நன்னெறி பெற்றன னன்றே

முட்புறம் பொதிந்த நெட்டிலைக் கைதை

சுரிமுகப் பணிலமொடு சூலுளைந் துழிழ்ந்த

தரளம் வெண்மடற் றாங்குவ தம்ம

கருங்கழிக் கரையில் வெண்பொடி பூசி

இருந்தவ முஞற்றியு மியாம்பெறற் கரிய

செஞ்சடைக் கிடந்த வெண்மதிக் கடவுள்

வருகவென் றழைத்துப் பெருநயப் பெய்திக்

கண்ணீர் வாரக் கலந்துடன் றழீஇ

உண்ணென வெண்சோ றேந்தித் தண்ணென

உடுக்கணத் தொடுமவ் வுடுபதிக் கடவுளை

மடற்றலைத் தாங்கி வைகுவது கடுக்கும்

நெய்தலொடு தழீஇய மருத வேலித்

தெய்வப் புலியூர் வைதிகக் கூத்த

பொன்னிறப் புறவுங் கருநிறக் காக்கையும்

மன்னுமா லிமய வரைப்புறஞ் சேர்ந்துழி

இருதிறப் பறவைக்கு மொருநிற னல்லதை

நிறம்வேறு தெரிப்ப துண்டோ விறைவநின்

இன்னருள் பழுத்த சந்நிதி சேர்ந்துழி

இருவேம் பெற்றது மொருபே றாகலின்

வேற்றுமை யுளதோ வில்லை

ஆற்றசால் சிறப்பி னனையரோ டெனக்கே 5



நேரிசை வெண்பா

ஓட்டுவிக்கக் கூட்டினைவிட் டோடும் பொறியரவைந்

தாட்டுவிக்குஞ் சித்தர்நீ ரானக்காற் - கூட்டமிட்டு

மன்றாடு மும்மையொரு மாசுணநின் றாட்டுவிக்க

நின்றாடு கின்றதென்கொ னீர் 6


கட்டளைக்கலித்துறை


நீருண்ட புண்டரி கத்துணைத் தாணிழற் கீழ்ப்பொலியும்

சீருண் டடித்தொண்டு செய்யா வெனக்குஞ்சிற் றம்பலத்தெம்

காருண்ட கண்டனைக் கண்டன னாலக் கடலமுதம்

ஆருண்டனர்மற் றவரெவ ரேனு மமரர்களே 7


நேரிசையாசிரியப்பா

அமரர் கோமக னரும்பெறல் வாழ்க்கையும்

இருநிதிக் கிழவ னொருபெரு வெறுக்கையும்

ஐங்கணைக் கிழவன் றுஞ்சா நலனும்

ஒருவழிக் கிடைப்பினும் வெருவந்து கலங்கிக்

கைத்தூண் வாழ்க்கை யுத்தம யோகிகட்

கெத்திறம் வைகினு மிடையூ றின்றே யானே

வளியுண் புளிப்பும் பித்துண் கைப்பும்

ஐயுண் மதுரமு மல்லன பிறவும்

நாச்சுவை யறிய நல்கின மேற்சென்

றதுவது வாக வழுந்திப் புதிதுண்டு

கழிபெருங் காம மூழ்கி முழுவதும்

பாவமும் பழியு மேவுவ தல்லது

செம்பொரு டெரிந்து சிற்றறி வொரீஇ

ஐம்புல னடக்கி யறந்தலை நின்று

தீநெறி விலக்கி நன்னெறிப் படர்தற்

குரனில் காட்சி யிழுதைய னாதலிற்

பூவாது பழுக்குஞ் சூலடிப் பனசம்

பார்கிழித் தோடிப் பணியுல களந்த

வேர்தொறும் வேர்தொறும் வெவ்வேறு பழுத்து

முட்புறக் கனிக டூக்குவ தொட்பமொடு

பதஞ்சலி முனிவனைப் பார்கொளத் தந்த

பிலங்கொளக் கொடுக்கும் பலங்கள்பல நிகர்க்கும்

மல்லலம் பொழில்சூழ் தில்லை வாண

வரமொன் றிங்கெனக் கருளல் வேண்டும், அதுவே

பெருங்குளிர்க் குடைந்த காலைக் கருந்துணி

பலதொடுத் திசைத்த வொருதுணி யல்லது

பிறிதொன்று கிடையா தாக வறுமனைக்

கடைப்புறத் திண்ணை யல்லது கிடக்கைக்

கிடம்பிறி தில்லை யாக கடும்பசிக்

குப்பின் றட்ட புற்கையூ ணல்லது

மற்றோ ருண்டி வாய்விட் டரற்றினும்

ஈகுந ரில்லை யாகநா ணாளும்

ஒழுக்க நிறைந்த விழுப்பெருங் கேள்வி

மெய்த்தவர் குழாத்தொடும் வைக வித்திறம்

உடனீங் களவு முதவிக் கடவுணின்

பெரும்பத மன்றியான் பிறிதொன்

றிரந்தனன் வேண்டினு மீந்திடா ததுவே 8






நேரிசை வெண்பா



வேதண்ட மேபுயங்கள் விண்ணே திருமேனி

மூதண்ட கூடமே மோலியாம் - கோதண்டம்

ஒற்றைமா மேரு வுமாபதியார் நின்றாடப்

பற்றுமோ சிற்றிம் பலம் 9







கட்டளைக்கலித்துறை



பற்றம் பலமிதித் துத்துதித் தேசெவ்வி பார்த்துப்புல்லர்

வெற்றம் பலந்தொறு மெய்யிளைத் தேறுவர் வீணர்கெட்டேன்

குற்றம் பலபொறுத் தென்னையு மாண்டுகொண் டோன்புலியூர்ச்

சிற்றம் பலங்கண்டு பேரம் பலத்தைச்செய் யாதவரே. 10







நேரிசையாசிரியப்பா



செய்தவ வேட மெய்யிற் றாங்கிக்

கைதவ வொழுக்கமுள் வைத்துப் பொதிந்தும்

வடதிசைக் குன்றம் வாய்பிளந் தன்ன

கடவுண் மன்றிற் றிருநடங் கும்பிட்

டுய்வது கிடைத்தனன் யானே யுய்தற்

கொருபெருந் தவமு முஞற்றில னுஞற்றா

தௌிதினிற் பெற்ற தென்னெனக் கிளப்பிற்

கூடா வொழுக்கம் பூண்டும் வேடம்

கொண்டதற் கேற்பநின் றொண்டரொடு பயிறலிற்

பூண்டவவ் வேடங் காண்டொறுங் காண்டொறும்

நின்னிலை யென்னிடத் துன்னி யுன்னிப்

பன்னா ணோக்கின ராகலி னன்னவர்

பாவனை முற்றியப் பாவகப் பயனின்யான்

மேவரப் பெற்றனன் போலு மாகலின்

எவ்விடத் தவருனை யெண்ணினர் நீயுமற்

றவ்விடத் துளையெனற் கையம்வே றின்றே, அதனால்

இருபெருஞ் சுடரு மொருபெரும் புருடனும்

ஐவகைப் பூதமோ டெண்வகை யுறுப்பின்

மாபெருங் காயந் தாங்கி யோய்வின்

றருண்முந் துறுத்த வைந்தொழி னடிக்கும்

பரமா னந்தக் கூத்த கருணையொடு

நிலையில் பொருளு நிலையற் பொருளும்

உலையா மரபி னுளங்கொளப் படுத்திப்

புல்லறி வகற்றி நல்லறிவு கொளீஇ

எம்ம னோரையு மிடித்துவரை நிறுத்திச்

செம்மைசெய் தருளத் திருவுருக் கொண்ட

நற்றவத் தொண்டர் கூட்டம்

பெற்றவர்க் குண்டோ பெறத்தகா தனவே. 11


நேரிசை வெண்பா

தக்கனார் வேள்வி தகர்த்துச் சமர்முடித்த

நக்கனார் தில்லை நடராசர் - ஒக்கற்

படப்பாய லான்காணப் பைந்தொடிதா ளென்றோ

இடப்பாதந் தூக்கியவா வின்று. 12


கட்டளைக் கலித்துறை

இனமொக்குந் தொண்டரொ டென்னையு

மாட்கொண்ட வீசர்தில்லைக்

கனமொக்குங் கண்டத்தெங் கண்ணுத

லார்சடைக் காடுகஞ்ச

வனமொக்கு மற்றவ் வனத்தே

குடிகொண்டு வாழும் வெள்ளை

அனமொக்குங் கங்கை யருகேவெண்

சங்கொக்கு மம்புலியே. 13


நேரிசை யாசிரியப்பா

புலிக்கான் முனிவற்குப் பொற்கழல் காட்டிக்

கலிக்கா னிவந்த கட்டில் வாங்கி

மாயோன் மணிப்படப் பாயலு மெடுத்து

வறும்பாழ் வீட்டில் வைத்துக்கொண்டிருந்

துறங்காது விழித்த வொருதனிக் கள்வ

காற்றேர்க் குடம்பைக் காமப்புட் படுக்கத்

தீப்பொறி வைத்த திருநுதற் கண்ண

ஆதி நான்மறை வேதியற் பயந்த

தாதை யாகிய மாதவ ரொருவரும்

இருங்கா ளத்தி யிறைவர்முன் னுண்ண

அருஞ்சா பத்தா லமுதமூ னாக்கும்

நற்றவ வேடக் கொற்றவ ரொருவரும்

ஒருபிழை செய்யா தருள்வழி நிற்பவவ்

விருவர்கண் பறித்த தரும மூர்த்தி

முட்டையிற் கருவில் வித்தினில் வெயர்ப்பில்

நிற்பன நௌிவ தத்துவ தவழ்வ

நடப்பன கிடப்பன பறப்பன வாகக்

கண்ணகன் ஞாலத் தெண்ணில்பல் கோடிப்

பிள்ளைகள் பெற்ற பெருமனைக் கிழத்திக்கு

நெல்லிரு நாழி நிறையக் கொடுத்தாங்

கெண்ணான் கறமு மியற்றுதி நீயென

வள்ளன்மை செலுத்து மொண்ணிதிச் செல்வ

அளியன் மாற்றமொன் றிகழாது கேண்மதி

எழுவகைச் சனனத் தெம்ம னோரும்

உழிதரு பிறப்பிற் குட்குவந் தம்ம

முழுவது மொரீஇ முத்திபெற் றுய்வான்

நின்னடிக் கமலம் போற்றுப விந்நிலத்

தொருபது வகைத்தாம் யோனிதோ றுழன்றும்

வெருவரும் பிறப்பின் வேட்கைய னாகிநின்

சந்நிதி புக்குமத் தாமரைக் கண்ணான்

துஞ்சினன் றுயிலொரீஇ யெழாஅன்

அஞ்சினன் பொலுநின் னாடல்காண் பதற்கே 14


நேரிசை வெண்பா

ஆட்டுகின்றோ ரின்றிமன்று ளாடுமா னந்தத்தேன்

காட்டுகின்ற முக்கட் கரும்பொன்று - வேட்டதனை

உற்றுநெடு நாளாக வுண்ணுமொர் மால்யானை

பெற்றதொரு கூந்தற் பிடி. 15


கட்டளைக்கலித்துறை

பிடிப்ப துமக்கெனை வேண்டின்வெங்< கூற்றெனும் பேர்முடிய

முடிப்பது மத்த முடியார்க்கு வேண்டுமுக் கட்பரனார்

அடிப்பது மத்தொன் றெடுத்துத்தென் பான்முக மாகநின்று

நடிப்பது மத்தன்மை யாநம னாரிது நாடுமினே. 16







நேரிசையாசிரியப்பா



மின்வீழ்ந் தன்ன விரிசடைக் காட்டிற்

பன்மாண் டுத்திப் பஃறலைப் பாந்தட்

சிறுமூச்சிற் பிறந்த பெருங்காற் றடிப்ப

விரிதிரை சுருட்டும் பொருபுனற் கங்கை

படம்விரித் தாடுமச் சுடிகைவா ளரவின்

அழற்கண் கான்றவவ் வாரழல் கொளுந்தச்

சுழித்துள் வாங்கிச் சுருங்கச் சுருங்காது

திருநுதற் கண்ணிற் றீக்கொழுந் தோட

உருகுமின் னமுத முவட்டெழுந் தோடியக்

கங்கை யாற்றின் கடுநிரப் பொழிக்கும்

திங்களங் கண்ணித் தில்லை வாண

அன்பருக் கௌியை யாகலி னைய

நின்பெருந் தன்மை நீயே யிரங்கி

உண்ணின் றுணர்த்த வுணரி னல்லதை

நுண்ணூ லெண்ணி நுணங்க நாடிப்

பழுதின் றெண்ணிப் பகர்து மியாமெனின்

முழுது மியாரே முதுக்குறைந் தோரே

நால்வகைப் பொருளு நவையறக் கிளந்த

வேத புருடனு மியாதுநின் னிலையெனத்

தேறலன் பலவாக் கூறின னென்ப, அதாஅன்று

முன்னைநான் மறையு முறைப்பட நிறீஇய

மன்னிருஞ் சிறப்பின் வாதரா யணனும்

கையிழந் தனனது பொய்மொழிந் தன்றோ, அதனால்

தௌிவில் கேள்வியிற் சின்னூ லோதி

அளவா நின்னிலை யளத்தும் போலும்

அறிவு மாயுளுங் குறையக் குறையாத

பையுணோ யெண்ணில படைத்துப்

பொய்யுடல் சுமக்கும் புன்மை யோமே 17







நேரிசை வெண்பா



புனையேந் தருவுதவு பொன்னரி மாலை

வனையேம் பசுந்துழாய் மாலை - பனிதோய்

முடிக்கமலஞ் சூடினோன் மொய்குழலோ டாடும்

அடிக்கமலஞ் சூடினோ மால் 18







கட்டளைக்கலித்துறை



சூடுங் கலைமதி யைத்தொட ராதுபைந் தோகைக்கஞ்சா

தோடும் பொறியர வொன்றுகெட் டேன்மறை யோலமிட்டுத்

தேடும் பிரான்றிருக் கூத்தினுக் கேமையல் செய்யுமென்றும்

ஆடுந் தொழில்வல்ல தாகையி னாலவ் வருமைகண்டே. 19







நேரிசையாசிரியப்பா



கட்புலங் கதுவாது கதிர்மணி குயிற்றி

விட்புலஞ் சென்ற மேனிலை மாடத்து

வல்லியி னுடங்கு மயிலிளஞ் சாயற்

சில்லரித் தடங்கட் டிருந்திழை மகளிர்

அளவில் பேரழ காற்றியும் வாளா

இளமுலைத் தொய்யி லெழுதிய தோற்றம்

தருநிழற் செய்த வரமிய முற்றத்

தமரர் மாதரோ டம்மனை யாடுழி

இமையா நாட்ட மிருவர்க்கு மொத்தலின்

நற்குறி தெரிதற்கு நாகிளங் குமரர்

விற்குறி யெழுதி விடுத்தது கடுக்கும்

வலனுயர் சிறப்பிற் புலியூர்க் கிழவநின்

பொன்னடிக் கொன்றிது பன்னுவன் கேண்மதி

என்றுநீ யுளைமற் றன்றே யானுளேன்

அன்றுதொட் டின்றுகா றலமரு பிறப்பிற்கு

வெருவர லுற்றில னன்றே யொருதுயர்

உற்றுழி யுற்றுழி யுணர்வதை யல்லதை

முற்று நோக்க முதுக்குறை வின்மையின்

முந்நீர் நீந்திப் போந்தவன் பின்னர்ச்

சின்னீர்க் கழிநீத் தஞ்சா னின்னும்

எத்துணைச் சனன மெய்தினு மெய்துக

அத்தமற் றதனுக் கஞ்சல னியானே

இமையாது விழித்த வமரரிற் சிலரென்

பரிபாக மின்மை நோக்கார் கோலத்

திருநடங் கும்பிட் டொருவனுய்ந் திலனாற்

சுருதியு முண்மை சொல்லா கொல்லென

வறிதே யஞ்சுவ ரஞ்சாது

சிறியேற் கருளுதி செல்கதிச் செலவே 20







நேரிசை வெண்பா



சென்றவரைத் தாமாக்குந் தில்லைச்சிற் றம்பலத்து

மன்றவரைத் தாமாக்க வல்லவர்யார் - என்றுமிவர்

ஆடப் பதஞ்சலியா ராக்கினா ரென்பிறவி

சாடப் பதஞ்சலியார் தாம். 21







கட்டளைக்கலித்துறை



தாமக் குழலினல் லார்விழி மீன்பொரச் சற்றுமினிக்

காமக் கருங்குழியிற்சுழ லேங்கலந் தாடப்பெற்றேம்

நாமப் புனற்கங்கைப் பேராறு பாயநஞ் சங்களத்தும்

வாமத் தமுதமும் வைத்தாடு மானந்த மாக்கடலே. 22







நேரிசையாசிரியப்பா



கடங்கலுழ் கலுழிக் களிநல் யானை

மடங்கலந் துப்பின் மானவேல் வழுதிக்

கிருநில மகழ்ந்து மெண்ணில்பல் காலம்

ஒருவன் காணா தொளித்திருந் தோயை

வனசப் புத்தேண் மணிநாப் பந்திக்

கவனவாம் புரவியிற் காட்டிக் கொடுத்துப்

பைந்தமிழ் நவின்ற செந்நாப் புலவன்

ஐந்திணை யுறுப்பி னாற்பொருள் பயக்கும்

காமஞ் சான்ற ஞானப் பனுவற்குப்

பொருளெனச் சுட்டிய வொருபெருஞ் செல்வ

திருத்தொண்டத் தொகைக்கு முதற்பொரு ளாகி

அருமறை கிளந்தநின் றிருவாக்கிற் பிறந்த

அறுபதிற் றாகிய வைம்பதிற்று முனிவருள்

ஒருவனென் றிசைத்த விருபிறப் பாள

வரைசெய் தன்ன புரசை மால்களிற்

றரைசிளங் குமரர் திருவுலாப் போதத்

தவளமா டங்க ளிளநிலாப் பரப்பிச்

செங்கண்யா னைக்கு வெண்சுதை தீற்ற

முதிரா விளமுலை முற்றிழை மடந்தையர்

கதிர்செய் மேனிக்குக் கண்மலர் சாத்தக்

கடவுட் களிற்றிற் கவின்கொளப் பொலிந்த

உடலக் கண்ண ரொருவ ரல்லர்

இருநிலத் தநேகரென் றெடுத்துக் காட்டும்

திருவநீண் மறுகிற் றில்லை வாண

வேய்ச்சொற் றொக்க வாய்ச்சொற் போல

விரிச்சியிற் கொண்ட வுரைத்திற நோக்கி

வினைமேற் செல்லுநர் பலரே யனையர்க்

கவ்வினை முடிவதூஉங் காண்டு மதாஅன்று

பல்லியும் பிறவும் பயன்றூக் காது

சொல்லிய பொருளுந் துணிபொரு ளுடைத்தெனக்

கொண்டோர் கொளினுங் குறைபாடின்றே, அதனால்

யாவர் கூற்றுநின் னேவலி னல்லதை

நிகழா நிகழ்ச்சி யுணராது போலும்

குழந்தை யன்பிற் பெரும்புகழ் நவிற்றிநின்

ஆணையி னின்ற வென்னை

நாணிலை கொல்லென நகுவதென் மனனே. 23

நேரிசை வெண்பா

மன்றுடையான் செஞ்சடைமேல் வாளரவுக் குள்ளஞ்சி

என்றுமதி தேய்ந்தே யிருக்குமால் - நின்றுதவம்

செய்யுமுனி வோர்காமத் தீப்பிணிக்கஞ் சித்தமது

பொய்யுடலை வாட்டுமா போல். 24

கட்டளைக்கலித்துறை

வாடிய நுண்ணிடை வஞ்சியன் னீர்தில்லை மன்றினுணின்

றாடிய கூத்த னலர்விழி முன்றி லரும்பகலும்

நீடிய கங்குலுங் கண்ணிரண் டாலுற நெற்றிக்கண்ணாற்

கூடிய தீப்பொழு தாகுங்கொன் மாலைக் கொடும்பொழுதே. 25



நேரிசையாசிரியப்பா


கொடியு முரசுங் கொற்றவெண் குடையும்

பிறர்கொளப் பொறாஅன் றானே கொண்டு

பொதுநீங்கு திகிரி திசைதிசை போக்கிச்

செவியிற் கண்டு கண்ணிற் கூறி

இருநிலம் புரக்கு மொருபெருவேந்தன்

மிக்கோ னொருவன் வெறுக்கை நோக்குழித்

தொக்கதன் வெறுக்கை சுருங்கித் தோன்ற

இழப்புறு விழும மெய்தி யழுக்கறுத்து

மற்றது பெறுதற் குற்றன தெரீஇ

அயிற்சுவை பெறாஅன் றுயிற்சுவை யுறாஅன்

மாணிழை மகளிர் தோணலங் கொளாஅன்

சிறுகாற்று வழங்காப் பெருமூச் செறிந்து

கவலையுற் றழிவதூஉங் காண்டும் விறகெடுத்

தூர்தொறுஞ் சுமந்து விற்றுக் கூலிகொண்டு

புற்கையு மடகு மாந்தி மக்களொடு

மனையும் பிறவு நோக்கி யயன்மனை

முயற்சியின் மகனை யிழித்தன னெள்ளி

எனக்கிணை யிலையென வினையன்மற் றொருவன்

மனக்களிப் புறீஇ மகிழ்வதூஉங் காண்டும், அதனால்

செல்வ மென்பது சிந்தையி னிறைவே

அல்கா நல்குர வவாவெனப் படுமே

ஐயுணர் வடக்கிய மெய்யுணர் வல்லதை

உவாக்கடல் சிறுக வுலகெலாம் விழுங்கும்

அவாக்கடல் கடத்தற் கரும்புணை யின்றே, அதனால்

இருபிறப் பியைந்த வொருபிறப் பெய்தும்

நான்மறை முனிவர் மூவா யிரவரும்

ஆகுதி வழங்கும் யாக சாலையிற்

றூஉ நறும்புகை வானுற வெழுவ

தெழுநாப் படைத்த முத்தீக் கடவுள்

கடலமிழ் துமிழ்ந்தாங் கவியமிழ் துண்ண

வரும்பெருந் தேவரை வானவர் கோனொடும்

விருந்தெதிர் கொள்கென விடுத்தது கடுக்கும்

வலனுயர் சிறப்பிற் புலியூர்க் கிழவநின்

அருள்பெற் றுய்தற் குரிய னியானெனிற்

பல்லுயிர்த் தொகுதியும் பவக்கட லழுந்த

அல்லல் செய்யு மவாவெனப் படுமவ்

வறுமையி னின்றும் வாங்கி

அறிவின் செல்வ மளித்தரு ளெனக்கே. 26


நேரிசை வெண்பா


என்செய்தீர் தில்லைவனத் தீசரே புன்முறுவல்

முன்செய் தெயிலை முடியாமற் - கொன்செய்த

பொற்புயங்க நாணேற்றிப் பொன்மலையைத் தேவரீர்

மற்புயங்க ணோவ வளைத்து. 27



கட்டளைக்கலித்துறை


வள்ளக் கலச முலையெம் பிராட்டி வரிநயனக்

கள்ளச் சுரும்பர் களிக்கின்ற வாசடைக் காட்டிற்கங்கை

வெள்ளத்தை மேலிட்டு வெண்டா தணிந்து விராட்புருடன்

உள்ளக் கமலத்தி னூறுபைந் தேறலை யுண்டுகொண்டே. 28



நேரிசையாசிரியப்பா

கொண்டல்கண் படுக்குந் தண்டலை வளைஇத்

தடம்பணை யுடுத்த மருத வைப்பின்

இடம்புரி சுரிமுக வலம்புரி யீன்ற

தெண்ணீர் நித்திலம் வெண்ணில வெறிப்ப

ஊற்றெழு தீம்புனல் பாற்கட லாக

விரிதிரைச் சுருட்டே யரவணை யாகப்

பாசடைக் குழாங்கள் பசுங்கதிர் விரிக்கும்

தேசுகொண் மேனித் திருநிற னாகப்

பொற்றாது பொதிந்த சேயிதழ்க் கமலம்

மலர்விழி முதல பலவுறுப் பாக

அங்கணோர் வனசத் தரசுவீற் றிருக்கும்

செங்கா லன்னந் திருமக ளாகப்

பைந்துழாய் முகுந்தன் பள்ளிகொண் டன்ன

அந்தண் பூந்தட மளப்பில சூழ்ந்து

பல்வளம் பயின்ற தில்லையம் பதியிற்

பொன்னின் மன்றிற் பூங்கழன் மிழற்ற

நன்னடம் புரியு ஞானக் கூத்த

ஒருபெரும் புலவனோ டூட றீரப்

பரவை வாய்தலிற் பாயிரு ணடுநாள்

ஏதமென் றுன்னா திருகா லொருகாற்

றூதிற் சென்றநின் றுணையடிக் கமலத்

தீதொன் றியம்புவல் கேண்மதி பெரும

அலையா மரபி னாணவக் கொடியெனும்

பலர்புகழ் சேரிப் பரத்தையொடு தழீஇ

ஏகலன் றணந்தாங் கென்னையு முணராது

மோகமொ டழுந்தி முயங்குறு மமையத்

தங்கவட் குரிய தங்கைய ரிருவருட்

குடிலை யென்னு மடவர லொருத்தி

எய்தரும் புதல்விய ரைவரைப் பெற்றனள்

மோகினி யென்பவண் முவரைப் பயந்தனள்

ஆகிய புதல்விய ரங்கவர் மூவருட்

கலையெனப் பெயரிய கணிகைமற் றொருத்தி

தானு மூவரைத் தந்தன ளவருள்

மானெனப் பட்ட மடவர லொருத்தி

எண்மூன்று திறத்தரை யீன்றன ளித்திறம்

நண்ணிய மடந்தைய ரையெழு வரையும்

கிளப்பருங் காமக் கிழத்திய ராக

அளப்பில் கால மணைந்தனன் முயங்குழி

முறைபிறழ்ந் திவரொடு முயங்குத லொழிகென

முறைபிறழ்ந் தெவரொடு முயங்குத லொழிகென

அறிஞராங் குணர்த்த வஞ்சின னொரீஇ

நின்னிடைப் புகுந்தனன் மன்னோ வென்னிடை

ஞான வல்லியை நன்மணம் புணர்த்தி

ஆனா ஞேயத் தரும்பொருள் வழங்கி

இறவா வீட்டினி லிருத்திக்

குறையாச் செல்வரொடு கூட்டுதி மகிழ்ந்தே. 29


நேரிசை வெண்பா

கூடுங் கதியொருகாற் கும்பிட்டாற் போதுமென

நாடு மவிநயத்தை நண்ணிற்றால் - ஓடியகட்

காதனார் காணவொரு கால்காட்டிக் கையமைத்து

நாதனார் செய்யு நடம் 30


கட்டளைக்கலித்துறை


நடிக்கச் சிவந்தது மன்றெம் பிராட்டி நறுந்தளிர்கை

பிடிக்கச் சிவந்தது மன்றுகொ லாமெம் பிரானென்றும்பர்

முடிக்கச் சிவந்தன போலுங்கெட் டேன்புர மூன்றுமன்று

பொடிக்கச் சிவந்த நகைத்தில்லை யான்மலர்ப் பூங்கழலே. 31


சிதம்பர மும்மணிக்கோவை முற்றிற்று.

தமிழ் வளர்த்த தருமையாதீனம் -2

பழமொழி விளக்கம் எனும் தண்டலையார் சதகம்


தண்டலை என்பது சோழ நாட்டுக் காவிரித் தென்கரையில் அமைந்துள்ள சிவத் தலங்களுள் ஒன்று. 'திருத் தண்டலை நீள்நெறி' என்பது இதன் முழுப்பெயர். இத்தலத்திலுள்ள சிவபெருமான் மீது படிக்காசுப் புலவர் பாடிய நூலே தண்டலையார் சதகம் ஆகும்.


நண்பர்களே! இதுவரையும் சதக இலக்கியங்கள் பற்றிப் பொதுவான செய்திகளை அறிந்தோம். இனித் தண்டலையார் சதகம் பற்றிய சிறப்புச் செய்திகளை அறிய இருக்கின்றோம்.

நூல் ஆசிரியர் வரலாறு


இந்நூலை இயற்றிய புலவர் படிக்காசுப் புலவர் ஆவார். தொண்டை நாட்டைச் சார்ந்தவர். இவர் இல்லறத்தில் இருந்து பின்பு துறவறம் பூண்டவர். அதனால் இவர் படிக்காசுத் தம்பிரான் என்றும் சொல்லப்படுகின்றார். திருவாரூர் வைத்தியநாத நாவலரிடம் இலக்கண இலக்கியங்களைக் கற்றுப் புலமை பெற்றார்.

காயல்பட்டினம் சீதக்காதி முதலியோரிடம் புலமைக்காக வெகுமதிகள் பெற்றவர். இறையன்பு மிகுந்தவர். பல தலங்களுக்கும் சென்று வழிப்பட்டுள்ளார். தில்லையில் தங்கி இருந்தபோது கையில் பொருள் இல்லை. தில்லை சிவகாமி அம்மையைப் பாடினார். ஐந்து பொற்காசுகள் அம்மையின் அருளால் வீழ்ந்தன. காசுகள் விழும்போது 'புலவருக்கு அம்மையின் பொற்கொடை' என்ற ஒலி எழுந்தது. அவற்றைத் தில்லைவாழ் அந்தணர்கள் பொன் தட்டில் வைத்துப் பல சிறப்புகளுடன் புலவருக்கு அளித்தனர். இக்காரணத்தால் இவருக்குப் 'படிக்காசுப் புலவர்' என்ற பெயர் வழங்கலாயிற்று.


இப்புலவர் தருமபுர ஆதீனம் ஆறாவது குரு மகா சந்நிதானம் திருநாவுக்கரசு தேசிகரிடம் ஞானோபதேசம் பெற்றார். ஒரு நாள் தில்லையில் கூத்தப் பிரானது திருமுன்பு இருந்த திரைச்சீலை தீப்பற்றி எரிந்ததை யோகக் காட்சியால் உணர்ந்தார். தம்முடைய கைகளைப் பிசைந்தார். அங்கே பற்றிய தீ அணைந்தது. இவ்வாறாக அருளிச் செயல்கள் பலவற்றைப் புலவர் நிகழ்த்தி உள்ளார்.


இவரால் இயற்றப்பட்ட நூல்கள்


தொண்டை மண்டல சதகம்

தண்டலையார் சதகம்

சிவந்து எழுந்த பல்லவன் உலா

பாம்பு அலங்காரம் வருக்கக் கோவை

திருச்செங்கோட்டுத் திருப்பணி மாலை

தண்டலையார் சதகம் - ஓர் அறிமுகம்

''பழமொழி விளக்கம் எனும் தண்டலையார் சதகம்'' என்பது இந்நூலின் முழுப்பெயர். திருக்குறள், நாலடியார் முதலிய நீதி நூல்களில் பல்வேறு அறங்கள் கூறப்பட்டுள்ளதை நீங்கள் அறிவீர்கள். அதுபோன்ற அறங்கள் பலவற்றைத் தண்டலையார் சதகம் எடுத்துரைக்கிறது.

இந்நூலுக்குப் பழமொழி விளக்கம் என்ற மற்றொரு பெயரும் உண்டு.


''இசைந்த பழமொழி விளக்கம் இயம்பத்தானே''

''விளங்கு பழமொழி விளக்கம் அறிந்துபாட''

(தண்.சத. 1, 2)


என வரும் காப்புச் செய்யுட்களால் இதனை அறியலாம். இந்தச்சதகப் பாடல்களின் ஈற்றடியில் உலகில் வழங்கும் ஏதேனும் ஒரு பழமொழி இடம்பெற்று இருக்கும். தண்டலைப் பதியில் கோயில் கொண்டிருக்கும் 'நீள்நெறி நாதர்'' இச்சதகத்தின் தலைவர் ஆவார். இந்நூலுள் நூறு என்ற எண்ணிக்கையை விடக் கூடுதலாகப் பாடல்கள் உள்ளன. அவை பிற்காலத்து இடைச் செருகலாக இருக்க வேண்டும் என்று ந.வீ. செயராமன் கருதுவார்.

தமிழ் வளர்த்த தருமையாதீனம் -1

தமிழிசை வளர்த்த  ஓதுவா மூர்த்திகள்  மரபு
கட்டுரையாளர் பின்னலூர் மு.விவேகானந்தன்
நன்றி: தமிழ்மணி (தினமணி)
தொகுத்து அனுப்பியவர்: டாக்டர் கண்ணன் நடராசன்
--------------------------------------------------------------------------------

சமயம் மக்களுக்கு நம்பிக்கையூட்டும் மாபெரும் சக்தியாகும். அதில் சைவ சமயம் மனித நேயத்தை வற்புறுத்தும் ஓர் அன்பு நெறியாகும். சைவ சமயத்துக்கு இடையூறு நிகழ்ந்த காலங்களில் நாளும் இன்னிசையால்  தமிழ் வளர்த்த ஞானசம்பந்தர், தம் தேவாரப் பதிகங்களில் பதிகத்தை ஓதுவதால் விளையும் பயன்கூறும் பாடல், பதிக இறுதியில் இடம் பெறும். இதனை "திருக்கடைக்காப்பு" என்பர். சுமார் 21 பண் வகைகள் அமைந்த தேவாரத்தை ஓதுதல் என்பது ஓர் ஒப்பற்ற திறனாகும்.


ஞானசம்பந்தர் வழியில் இன்றும் தமிழிசையால் சைவநெறி பரப்பும்;

தருமபுரம் பி.சுவாமிநாதன்

சீர்காழி எஸ்.திருஞானசம்பந்தம்

திருச்சிராப்பள்ளி முத்துக்கந்தசாமி தேசிகர்

திருத்தணி என்.சுவாமிநாதன்

பழனி சண்முகசுந்தர தேசிகர்

சிங்கப்பூர் எஸ்.முத்துக்குமாரசாமி தேசிகர்



போன்ற தமிழ்மறை இசை மாமணிகளை உருவாக்கிய பெருமை தருமையாதீன தேவாரப்பாடசாலையின் தலைமை ஆசிரியராக சுமார் 60 ஆண்டுகள் திருமுறைத் தொண்டாற்றிய ஆர்.வேலாயுத ஓதுவா மூர்த்திகளையே சாரும்.


ஓதுவா மூர்த்திகள், "வரைவிலால் எயில் எய்த மயேந்திரப் பள்ளி" என்று சம்பந்தர் பெருமானால் பாடல் பெற்றதும், சூரியன், சந்திரன், இந்திரன் முதலானோர் வழிபட்டதுமான சீர்காழி வட்டத்தில் உள்ள திருமயேந்திரப் பள்ளியில் (தேவிக்கோட்டை என்றும் அழைக்கப்படும்) க.இரத்தின முதலியார் - விசாலாட்சி தம்பதிக்கு, 1910ஆம் ஆண்டு செப்டம்பர் 30ஆம் தேதி அருட்புதல்வராய்ப் பிறந்தார். அருள்மிகு வடிவாம்பிகை உடனாகிய திருமேனி அழகேசர் பால் அயரா அன்பு கொண்ட தொண்டை மண்டல சைவ வேளாளர் குடும்பத்தினரைச் சோழ மன்னர்கள் தேவிக்கோட்டையார் எனப்பாராட்டி கெளரவித்து வந்தனர். இத்திருமரபில் வந்து தோன்றியவரே வேலாயுத ஓதுவா மூர்த்திகள்.

பிறந்து, மொழி பயின்று தம் மூன்றாம் அகவையில் தந்தையைப் பறிகொடுத்துத் தொடக்கக் கல்வியையும் மூன்றாம் வகுப்போடு நிறுத்திக் கொண்டார். பின்பு பத்தாம் அகவையில் சிதம்பரம் சி.ப. தேவாரப் பாடசாலையில் நடராஜ ஓதுவா மூர்த்திகளிடம் தேவார இசைப் பயிற்சியைக் குற்றமறக் கற்றார்.

நல்ல குரல் வளமும், இசை ஞானமும் இயல்பாகவே அமைந்திருந்ததனால் பண்ணாங்கம், சுத்தாங்கம் ஆகிய பாடப் பயிற்சிகளை ஐந்தே ஆண்டுகளில் கற்று, பக்திச் சுவை நனி சொட்டச் சொட்டப் பாடும் கவியாக, ஓதுவா மூர்த்தியாக உயர்ந்தார். தொடக்கத்தில் என்னும் வைத்தீஸ்வரன் கோயிலில் 1925 முதல் 1928 வரை ஓதுவா மூர்த்திகள் பலருடன் திருமுறைப் பணி செய்து, பின் 1929-1930இல் திருவண்ணாமலையில் அருணாசலேஸ்வரர் முன் தேவாரப் பாராயணம் புரிந்து வந்தார்.

1931ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தருமையாதீனத்தின் 23வது குருமகா சந்நிதானத்தின் அருளாணைப்படி திருமுறைப் பணியேற்று இண்டைமாலை சூட்டப்பட்டு ஆதீன ஓதுவா மூர்த்திகள் என்னும் சிறப்பைப் பெற்றார்.

1933இல் அங்கம்மாள் என்னும் நல்லாளை மணந்து, இல்லறப் பயனாய் ஒரு பெண் மற்றும் மூன்று ஆண் குழந்தைகளை மக்கட் செல்வங்களாகப் பெற்றார்.

1941ஆம் ஆண்டு மார்ச் திங்களில் தருமையாதீனத்தின் 24வது பீடாதிபதியால் தோற்றுவிக்கப்பட்ட தேவாரப் பாடசாலையில் தலைமை ஆசிரியராகப் பணி அமர்த்தப்பட்டார். இப்பாடசாலையில் சுமார் 60 ஆண்டுகள் தலைமைப்பணி ஏற்று நூற்றுக்கணக்கான ஓதுவா மூர்த்திகளை உருவாக்கிய பெருமை வேலாயுத ஓதுவா மூர்த்திக்கு உண்டு.

திருமுறையைப் பாடும் பணியே பணியாக இருந்த ஓதுவா மூர்த்திகளை இன்னிசைச் சொற்பொழிவுகளும் ஆற்ற தருமை ஆதீன 25வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை குருமணி பணித்தார். மேலும் அவரது ஜென்ம நட்சத்திர நாளில் தேவாரப் பாடல் பெற்ற சிவத்தலங்கள் தோறும் சென்று வழிபாடியற்றி அவ்வத் தலத்திருப்பதிகளைக் குறிப்புரைகளோடும், வரலாற்றோடும் எழுதி உதவினார். தமிழ் அர்ச்சனை பற்றி தேவாரத் திருப்பதிகத் தொடர்களிலிருந்து இவர் தொகுத்து அளித்துள்ள நூல் ஆதீன வெளியீடாகவும் வெளிவந்துள்ளது.

பண் ஆராய்ச்சியில் மிகுந்த ஈடுபாடு கொண்ட ஓதுவா மூர்த்தி, சென்னை தமிழிசை மன்றத்தின் பண் ஆராய்ச்சி மாநாடுகளில் பங்கேற்றுள்ளதோடு, தேவாரத்தால் தமிழிசை சிறந்து விளங்குவதையும் சான்றுகளுடன் விளக்கியுள்ளார்.

திருமுருக கிருபானந்தவாரியார் சுவாமிகளால் "திருமுறை ஓதுவார் பேக்டரி" என்று புகழப்பட்ட அவரது திருமுறைப் பணிகளைப் பாராட்டி 1970இல் சீர்காழியில் திருமுலைப்பால் விழாவில் "திருமுறைக் கலாநிதி" என்னும் பட்டம் 25வது தருமையாதீன குருமகா சந்நிதானத்தாலும், "தமிழ் இசைமாமணி" என்னும் பட்டம் 1984இல் காஞ்சிப் பெரியவராலும், திருக்கழுகுன்றத்தில் நடந்த 13வது திருஞானசம்பந்தர் இசைவிழாவில் "தேவாரத் தமிழிசைத் தென்றல்" என்ற பட்டமும் வழங்கப்பட்டது. "அன்பர் பணி செய்ய எமை ஆளாக்கி விட்டால் இன்ப நிலை தானே வந்தெய்தும் பராபரமே" என்ற கொள்கைப் பிடிப்போடு திருத்தொண்டு புரிந்தார். பன்னூறு திருமுறை இசைக்கலைஞர்களை உருவாக்கிய ஓதுவா மூர்த்தி, "சிவகதி பெறுவது திடமாமே" என்னும் ஞானசம்பந்தரின் வாக்கிற்கேற்ப, 1993ஆம் ஆண்டு மே 16ஆம் தேதி சென்னையில் சிவகதி பெற்றார். அன்னாரின் பெருமைகளைப் பாராட்டி 1998ஆம் ஆண்டு அக்டோபர் 16ஆம் தேதி தருமை ஆதீனத்தின் 26வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாச்சார்ய சுவாமிகள் அன்னாரது திருவுருவப் படத்தைத் திறந்து வைத்து அருளாசியுரை நல்கினார்.

இறைவனைச் சென்றடைதற்கு எளிய வழி குருவை வழிபடுதலால் கிட்டும்" என்னும் திருமந்திரம் உணர்ந்த தருமபுரம் பி. சுவாமிநாதன், ஓதுவா மூர்த்தியின் நாண்மங்கல நாளில் விழா நடத்தி, குருகாணிக்கை அளித்து வருகிறார். இவரைப் போலவே திருச்சியில் முத்துக்கந்தசாமி தேசிகரும் ஆண்டுதோறும் விழா எடுத்து கெளரவித்து வருகிறார்.

திருமுறைத் தமிழிசை மெல்ல மெல்ல அருகி வரும் இந்நாளில் வேலாயுத ஓதுவா மூர்த்தி நினைவைப் போற்றும் வகையில் மீண்டும் ஞானசம்பந்தரின் பண்ணிசை பாரெங்கும் பரவி சைவம் தழைத்திட சமய நிறுவனங்களும், இந்து அறநிலையத்துறையும் முன்வந்து தேவாரப் பாடசாலைகளை அமைக்க வேண்டும். அதுதான் அன்னாருக்கு நாம் செய்யும் நன்றிக் கடனாகும். திருநெறிய தமிழிசை வளர்த்த வேலாயுத ஓதுவா மூர்த்திகளின் புகழ் பாரெங்கும் பரவி சைவம் செழிக்கத் தொண்டாற்றிடுவோமாக.

Monday, June 11, 2012

பூழியர் கோன் வெப்பொழித்த புகலியர் கோன் கழல் போற்றி
ஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்த பிரான் அடி போற்றி
வாழி திருநாவலூர் வன் தொண்டர் பதம் போற்றி
ஊழி மலி திருவாதவூரர் திருத்தாள் போற்றி

- ஸ்ரீ உமாபதி சிவாசாரியார் சுவாமிகள்.


உரகா பரணத் திருமார்பும், உமைஒப் பனையாள் இடப்புறமும்,
சிரமா லிகையும் புரிசடையும், செய்ய வாயும் கறைமிடறும்,
வரதா பயமும் மழுமானும், வயங்கு கரமும் மலரடியும்,
கருவா புரியான் வெளிப்படுத்திக், காட்சி கொடுத்து நின்றானே.

- ஸ்ரீ சைவ சிரோண்மணி ஞான வரதுங்க ராம பாண்டியர்




தனையறியார் ஈசன்றனையறியார் பாச
வினையறியார் ஆனந்தமேவார் - தனையறியுஞ்
சிட்டர்தமக் கில்லாத தீங்குரைப்பர் பொல்லாத
துட்டர்தமக் குள்ள தொழில்." -

ஸ்ரீ-ல-ஸ்ரீ குருஞான சம்பந்த சுவாமிகள்

திருக்கயிலாய தருமை ஆதீனம் குரு பரம்பரை

திருக்கயிலாய பரம்பரை தருமை ஆதீனம் எங்கிருந்து தொடங்குகிறது என்பதை பற்றி  பார்ப்போம்:


ஸ்ரீ கண்டசிவம்

-

நந்தியம் பெருமான்

-

சனற்குமாரர்

-

சத்தியஞானதரிசினிகள்

... -

பரஞ்சோதி முனிவர்

-

மெய்கண்டார்

-

அருணந்தி சிவம்

-

மறைஞானசம்பந்தர்

-

உமாபதி சிவம்

-

சித்தர் சிவப்பிரகாசர்

-

காழி கங்கைகண்டார்

-

காழி சிற்றம்பலநாடிகள்

-

பழுதைக்கட்டி ஞானசம்பந்தர்

-

சிவபுரம் ஞானப்பிரகாசர்

-

சிவபுரம் தத்துவபிரகாசர்

-

பழுதைக்கட்டி ஞானப்பிரகாசர்

-

கமலை ஞானப்பிரகாசர் (குருஞானசம்பந்தரின் குருநாதர் )

-

ஸ்ரீ குருஞானசம்பந்தர் (குருமுதல்வர் )