சீரணியும் நுதலின்விழி மழுமான் நாகம் திருந்தும்எரி பொருந்துவிடம் தெரிந்தி டாமல்
தாரணிஅன் பரையாள அவர்போல் வந்த சைவசிகா மணிஎவர்க்கும் தலைவன் எங்கோன்
காரணியும் நெடியபொழிற் கமலை வேந்தன் கருணைமழை பொழியும்இரு கடைக்க ணாளன்
பாரணியும் ஞானசம் பந்தன் எந்தை பரமன்இரு சரணமலர் பரவி வாழ்வாம்.
- சம்பந்த சரணாலயர
ஞானக்குழந்தை :
தமிழகத்தில் - தென்பாண்டி நாட்டில் ஷ்ரீவில்லிபுத்தூரில் கார்காத்த வேளாளர் மரபில் சுப்பிரமணிய பிள்ளை மீனாட்சியம்மை என்ற நல்லறப் பெரியோர்கட்கு அருந்தவ மகவாகப் பதினாறாம் நூற்றாண்டில் அவதரித்தவர், தருமை ஆதீன முதற் குருமூர்த்திகளாகிய ஷ்ரீ குருஞானசம்பந்த தேசிக பரமாசாரிய சுவாமிகள். இவருக்குப் பெற்றோர்கள், திருஞானசம்பந்தரைப்போல் தமது குழந்தையும் சிவஞானம் பெற்றுச் சைவம் வளர்க்கும் ஞானாசிரியனாகத் திகழ வேண்டும் என்று எண்ணி `ஞானசம்பந்தன்' என்ற நற்பெயரைச் சூட்டி வளர்த்து வருகையில், தமது குலதெய்வமாகிய சொக்கநாதரையும் மீனாட்சியம்மையையும் தரிசிப்பதற்கு ஞானசம்பந்தருடன் மதுரை சென்று பொற்றாமரைத் தடாகத்தில் நீராடி வழிபட்டனர். பெற்றோர்கள் ஊருக்குப் புறப்படுங்கால் ஞானசம்பந்தர் தன்னைத் தொடர்ந்து நின்ற தாயும் தந்தையுமாகிய சொக்கநாதரைப் பிரிய மனமின்றி, உடலுக்குத் தாய் தந்தையர்களாகிய பெற்றோர்களுக்கு விடை கொடுத்தனுப்பிச் சொக்கநாதர் வழிபாட்டிலே ஈடுபாடு கொண்டவரானார்.
கண்ணுக்கினிய பொருள்:
நாள்தோறும் பொற்றாமரைக் கரையில் அடியார்கள் சிவபூசை புரிவதைக் கண்டார் ஞானசம்பந்தர். தாமும் அவ்வாறு சிவபூசை புரிய எண்ணினார். சொக்கநாதரை வேண்டினார். கருத்தறிந்து முடிக்கும் கண்ணுதற் கடவுளும் அன்றிரவு அவர் கனவில் தோன்றி, `நாம் பொற் றாமரைத் தடாகத்தின் ஈசான்ய பாகத்தில் கங்கைக்குள் இருக்கிறோம். நம்மை எடுத்துப் பூசிப்பாயாக' என அருளினார். அவ்வண்ணமே மறுநாள் காலையில் பெருமானின் கருணையை வியந்து போற்றிப் பொற்றாமரைத் தடாகத்தில் மூழ்கினார். ஷ்ரீ சொக்கநாதப் பெருமான் கண்ணுக்கினிய பொருளாகத் தமது கரத்தில் வரப்பெற்றார். `ஆசாரி யன் மூலமாகத் தீகை்ஷ பெற்றுத்தானே சிவபூசை புரிதல் வேண்டும்; ஆசாரியன் வேண்டுமே; சிவஞான உபதேசம் பெறவேண்டுமே; எப்படிப் பூசையைப் புரிவேன்! என்ற எண்ணம் தோன்றவே, அது பற்றி இறைவனிடமே முறையிட்டார்.
ஞானாசாரியனை அடைதல் :
வேண்டத்தக்கது அறிந்து வேண்ட முழுதுந் தருவோனாகிய சொக்கநாதப் பெருமான் மறுநாள் கனவில் எழுந்தருளி `திருக்கயிலாய பரம்பரை - திருநந்தி மரபு மெய்கண்ட சந்தான வழியில் திருவாரூரில் விளங்கும் கமலை ஞானப்பிரகாசர் என்ற ஆசாரியரிடத்தில், வருகிற சோமவாரத்தில் ஞானோபதேசம் பெற்று நம்மைப் பூசிப்பாயாக' என அருளினார். அன்றிரவே கமலை ஞானப்பிரகாசர் கனவிலும் எழுந் தருளி, `ஞானசம்பந்தன் வருகிற சோமவாரத்தன்று வருவான்; அவனுக்கு ஞானோபதேசம் செய்து சிவபூசையும் எழுந்தருளுவிப் பாயாக' என்று அருளினான். ஞானசம்பந்தர் பல தலங்களையும் தரிசித்துக் கொண்டு திருவாரூர் சென்று, பூங்கோயிலில் உள்ள சித்தீச்சரம் தக்ஷிணாமூர்த்தி சந்நிதியில் அமர்ந்திருந்த கமலை ஞானப் பிரகாசரைக் கண்டார். காந்தம் கண்ட இரும்புபோல ஆசாரியரால் ஈர்க்கப்பட்டார். சமய விசேட நிர்வாண தீகை்ஷகளால் பாச ஞானம் பசுஞானங்கள் நீங்கிப் பதிஞானம் கைவரப் பெற்றார். சொக்கநாதப் பெருமானை ஆன்மார்த்த பூஜாமூர்த்தியாகப் பூசிக்கப்பெறும் பேற்றையும், ஞான அநுபூதியையும் அடைந்தார்.
கைவிளக்குப் பணிவிடை :
பன்னாளும் ஆசாரியப் பணிவிடை செய்து தங்கி இருக்கும் நாள்களில் ஒருநாள் தியாகராசப் பெருமானின் அர்த்தயாம பூசையைத் தரிசித்து ஆசாரியர் தமது மாளிகைக்கு எழுந்தருளினார். அப்பொழுது கைவிளக்குப் பணியாளன் உறங்கிவிட ஞானசம்பந்தர் தமக்கு ஞான ஒளியேற்றி நல்வழிகாட்டிய ஞானாசாரியருக்கு ஒளிவிளக்கு ஏந்தி முன்சென்றார். திருமாளிகையின் வாயில் முன்னர்ச் சென்றவுடன், சிவாநுபூதியிலேயே திளைத்திருந்த ஞானப்பிரகாசர், அருள்நிலை கைவரும் பக்குவத்திலிருந்த ஞானசம்பந்தரை `நிற்க' எனக் கட்டளை யிட்டு உட்சென்றார். ஆசாரியர் பெற்ற சிவாநுபூதியை ஞான சம்பந்தரும் கைவரப் பெற்றவராய் மாளிகை வாயிலில் கைவிளக்கு ஏந்தியவராகவே நின்றார். ஞானசம்பந்தரின் பெருமையை ஞாலம் அறியச்செய்து அதன்மூலம் சைவப் பயிர் தழைக்க இறைவன் திரு வுளம் பற்றினான் போலும். அன்றிரவு பெருமழை பெய்தது. சிவாநு பூதியில் திளைத்திருந்த ஞானசம்பந்தர் மீது ஒருதுளி மழை கூடப்பட வில்லை. விளக்கோ அணையாது சுடர்விட்டுப் பிரகாசித்துக் கொண்டு இருந்தது.
குருஞானசம்பந்தராயினார் :
வைகறைப் பொழுதில் ஞானப்பிரகாசரின் பத்தினியார் சாணம் தெளிக்க வருங்கால், ஞானசம்பந்தர் அநுபூதி நிலையில் நிற்பதையும், விளக்குச் சுடர்விட்டுப் பிரகாசிப்பதையும் கண்டு உட் சென்று பதியிடம் வியப்புடன் அதனை வெளியிட்டார்.
ஞானப் பிரகாசர் விரைந்து வந்து பார்த்து, ஞானசம்பந்தரிடம் திருவருள் பெருகுகின்ற நிலையைக் கண்டு மகிழ்ந்து "ஞானசம்பந்தா! நீ ஆசாரியனாக இருந்து, பக்குவம் உடையவர்களுக்கு ஞானோப தேசம் செய்து ஆசாரியனாக விளங்குவாயாக" என்று அருளினார். அப்பொழுது ஞானசம்பந்தர்,
கனக்கும் பொதிக்கும் எருதுக்கும் தன்னிச்சை கண்டதுண்டோ
எனக்கும் உடற்கும் எனதிச்சை யோஇணங் கார்புரத்தைச்
சினக்குங் கமலையுள் ஞானப்ர காச சிதம்பரஇன்
றுனக்கிச்சை எப்படி அப்படி யாக உரைத்தருள.
என்ற பாடலைப்பாடி "எங்குச்சென்று எவ்வாறு இருப்பேன்" என்று விண்ணப்பிக்க, ஞானப்பிரகாசர், "மாயூரத்தின் ஈசான்ய பாகத்தில் வில்வாரணியமாய் உள்ளதும், திருக்கடவூரில் நிக்கிரகம் பெற்ற எமதருமனுக்கு அநுக்கிரகம் செய்ததும் ஆன தருமபுரத்தில் இருந்து கொண்டு, அன்பு மிக உண்டாய், அதிலே விவேகமுண்டாய், துன்ப வினையைத் துடைப்ப துண்டாய், இன்பம் தரும் பூரணத்துக்கே தாகமுண்டாய் ஓடி வருங்காரணர்க்கு உண்மையை உபதேசித்துக் குருவாக விளங்குவாயாக" என்று கட்டளையிட்டருளினார். ஞான சம்பந்தர், "குருஞானசம்பந்தர்'' ஆயினார்.
தருமபுரத்தில் ஆதீனம் கண்டார் :
ஆசிரியர் ஆணையை மறுத்தற்கு அஞ்சியவராய்க் கன்றைப் பிரிந்த பசுப்போல வருந்தும் குருஞானசம்பந்தரை நோக்கிக் "குருவாரந்தோறும் வந்து நம்மைத் தரிசிப்பாய்" என்று தேறுதல் கூறினார் ஞானப்பிரகாசர்.
குருஞானசம்பந்தர் தம் குரு ஆணையைச் சிரமேற்கொண்டு தமது ஆன்மார்த்த மூர்த்தியுடன் தருமபுரத்திற்கு எழுந்தருளி, தருமபுர ஆதீன மடாலயத்தை நிறுவியருளினார். ஞானாநுபூதியில் திளைத்துப் பல பக்குவ ஆன்மாக்களுக்குச் சிவஞானோபதேசம் செய்து அநுபூதிச் செல்வராய்த் திகழ்ந்தார். அவர் அநுபூதியில் பொங்கித் ததும்பிப் பூரணமாய் எழுந்த சிவஞானப் பேரருவியே சிவபோக சாரம், சொக்க நாத வெண்பா, முத்தி நிச்சயம், திரிபதார்த்த ரூபாதி தசகாரிய அகவல், சோடசகலாப் பிராசாத ஷட்கம், சொக்கநாதக் கலித்துறை, ஞானப் பிரகாசமாலை, நவமணிமாலை ஆகிய எட்டு நூல்கள் ஆகும். பாடல்கள் எளிமையும், இனிமையும் பயப்பனவாய், பதி, பசு, பாசம் என்ற முப்பொருளுண்மையைத் தெளிய விளக்குவனவாய் உள்ளன.
ஆனந்த பரவசருக்கு உபதேசம் :
குருஞானசம்பந்தர் தம்மை அடைந்த பக்குவமுடையவர் களுக்கு உபதேசித்து அநுபூதிமானாக விளங்கும்போது, உபதேச பரம்பரையை வளர்த்துவர அதி தீவிர பக்குவ நிலையிலிருந்த ஆனந்த பரவசருக்கு உபதேசித்துத் தாம் ஜீவசமாதி கூடியருளினார்கள். அதிதீவிர நிலையில் இருந்த ஆனந்தபரவசர் தமது குருநாதர் உபதேசித்த ஞானநிலை விரைவில் கூடியவராய், தம் ஞானாசாரியர் ஜீவசமாதி கூடிய ஷ்ரீ ஞானபுரீசுவரர் ஆலய விமான ஸ்தூபியைத் தரிசித்தவாறு நிட்டை நிலை கூடினார்கள்.
மீண்டும் எழுந்தருளினார் :
அதுகண்ட ஏனைய சீடர்கள் குருமரபு விளங்க வேண்டுவதை ஆசாரியர் திருமுன் சென்று விண்ணப்பிக்க, பரமாசாரிய மூர்த்திகள் ஜீவசமாதியினின்றும் எழுந்து வந்து ஷ்ரீ சச்சிதானந்த தேசிகருக்கு உபதேசம் செய்து அநுபூதிநிலை வருவித்து ஞானபீடத்து இருத்தி வைகாசி மாதம் கிருஷ்ணபக்ஷ சப்தமி திதியில் தாம் முன்போல் ஜீவ சமாதியில் எழுந்தருளினார்கள்.
தருமை ஆதீனப் பணி :
கி.பி. 16 ஆம் நூற்றாண்டில் ஷ்ரீ குருஞானசம்பந்தரால் தோற்றுவிக்கப் பெற்ற இத்திருத்தருமை ஆதீனம் அதுமுதல் வழி வழியாக விளங்கி, மொழித் தொண்டும், சமயத் தொண்டும், சமூகத் தொண்டும் ஒல்லும் வகையெல்லாம் ஆற்றி வருகிறது. இப்பொழுது ஞானபீடத்தில் இருபத்தாறாவது குருமகாசந்நிதானம் ஷ்ரீலஷ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் எழுந்தருளியிருந்து அருளறப் பணிகள் பல இயற்றி அருளாட்சி புரிந்து வருகிறார்கள்.
வாழ்க தருமை ஆதீனம்! வளர்க குருபரம்பரை!
ஆய்வார் பதிபசு பாசத்தின் உண்மையை ஆய்ந்தறிந்து
காய்வார் பிரபஞ்ச வாழ்க்கையெல் லாங்கல்வி கேள்வியல்லல்
ஓய்வார் சிவானந்த வாரியுள் ளேயொன் றிரண்டுமறத்
தோய்வார் கமலையுள் ஞானப்ர காசன்மெய்த் தொண்டர்களே.
ஆசையறாய் பாசம்விடாய் ஆனசிவ பூசைபண்ணாய்
நேசமுடன் ஐந்தெழுத்தை நீநினையாய் - சீ சீ
சினமே தவிராய் திருமுறைகள் ஓதாய்
மனமே உனக்கென்ன வாய்.
- குருஞான சம்பந்தர்.
This comment has been removed by a blog administrator.
ReplyDeleteஅருமை சமூகப் பணிகள் தொடர இறைஅடியேனின் வாழ்த்துக்கள்
ReplyDelete