Thursday, June 14, 2012

தருமை ஆதீனம் இயற்றிவரும் பணிகள்

                                                                        உ

                         
                             
                          தருமை ஆதீனம் இயற்றிவரும் பணிகள்

1. தேவாரப் பாடசாலை நிறுவித் தெய்வத் தமிழ் வளர்ப்பது.

2. வேத சிவாகம பாடசலை வைத்துத் திருக்கோயில் பூசை முறைகளைப் பயிற்றுவிப்பது.

3. திருமுறைகள், சித்தாந்த சாத்திரங்கள், சைவ சமய நூல்கள் பலவற்றைத் தெளிவுற அச்சிட்டு வழங்குவது.

4. தேவாரத் தலங்கள் தோறும் வழிபாடுகள் நிகழ்த்தி அவ்வத்தலத் தேவாரத்தைப் புராண வரலாறுகளுடன் அச்சிட்டு வழங்குவது.

5. ஆலயங்கள் பலவற்றிலும் நிகழும் பெருவிழாக்களில் சமய விரிவுரைகள், மாநாடுகள் நிகழ்த்திச் சமய தத்துவங்களை மக்கட்கு உணர்த்துவது.

6. தொடக்கப்பள்ளி, உயர்நிலைப் பள்ளி, கலைக்கல்லூரி அமைத்து மாணவர்களுக்குக் கல்வி நலம் தருவது.

7. அனைத்துலக சைவசித்தாந்த ஆராய்ச்சி மையம் நிறுவி அதன் வாயிலாகக் கடல் கடந்த நாடுகளிலும் நம் நாட்டிலும் வாழும் சமயம் சார்ந்த மக்கட்குச் சைவசமயப் பெருமைகளை அறிவுறுத்துவதோடு சென்னை, திருச்சி, நெல்லை ஆகிய இடங்களில் மாலை நேரக் கல்லூரி நடத்தி வருவது.

8. உயர்நிலைப் பள்ளிகள் கலைக்கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் தமிழ் மொழியை ஊக்கத்தோடு பயிலப் பரிசுகள் வழங்குவது.

9. ஞானசம்பந்தம் என்னும் மாத இதழ் நடத்தி அதன் வாயிலாக மக்கட்குச் சமய உண்மைகளை உணர்த்தி வருவது.

10. ஆதீனத்தின் அருளாட்சியிலுள்ள 27 திருக்கோயில்களையும் தூய்மையாகப் பரிபாலித்து நாள்வழிபாடு சிறப்புவழிபாடுகள் நிகழ்த்திவருவது.

11. ஆதீனக் கோயில்கள் பலவற்றில் நூலகங்கள் அமைத்தும் மாலைநேரத்தில் ஓதுவாமூர்த்திகளைக் கொண்டு குழந்தைகட்குத் திருமுறை வகுப்புக்கள் நடத்தியும் உதவுவது.


12. சமய நூல்களை ஆய்வு நோக்கோடு எழுதி வெளியிட முன்வருவோர்க்கு உதவுவது.

13. ஆதீனத்திருக்கோயில்களில் பழுதடைந்த கட்டிடப் பகுதிகளை இடித்துப் புதுப்பித்தும் 12 ஆண்டுகட்கு ஒருமுறை மூர்த்திகட்கு அஷ்டபந்தனம் சாத்தியும் திருக்குட நீராட்டு விழா நடத்துவது.

14. ஆதீனத் திருமடத்தில் பெரியதொரு நூலகம் அமைத்துப் பழைமையான ஓலைச்சுவடிகளையும் நூல்களையும் பேணி வருவது.

15. கல்வி பயிலும் ஏழை மாணவர்கட்குக் கல்விக் கட்டணம் புத்தகங்கள் வழங்கி உதவுவது.

16. மயிலாடுதுறையில் மகப்பேறு மருத்துவ நிலையம் அமைத்து நகராட்சிக்கு உதவியதுபோலச் சிங்கிப்பட்டி காசநோய் மருத்துவமனை சென்னை அடையாறு கான்சர் இன்ஸ்டியூட் போன்ற பொது நிறுவனங்களுக்கும் பெருந்தொகை உதவி வருவது.


17. ஆதீனக் குரு முதல்வர் குரு பூசைவிழாவில் சமய வகுப்புக்கள் கருத்தரங்குகள் திருநெறிய தெய்வத் தமிழ் மாநாடு முதலியன நடத்திவருவது.


18. அவ்வப்போது மக்கட்கு எல்லாச் சமய தத்துவங்களையும் மாநாடுகள் மூலம் உணர்த்திப் பொதுவாக அனைத்துச் சமய தத்துவங்களையும் மக்கள் அறியும்படிச் செய்வது.

19. தமிழ்நாட்டின் தலைநகராகிய சென்னையில் சமயப் பிரசார நிலையம் அமைத்துச் சமய வகுப்புக்கள் நடத்தியும், ஆதீனத்திருக் கோயில்களில் நிகழும் சிறப்பு விழாக்களின் பிரசாதங்களை அங்குள்ள மக்கட்கு வழங்கியும் வருவது.


20. திங்கள் தோறும் முதல் ஞாயிற்றுக் கிழமைகளில் ஸ்ரீலஸ்ரீ குருமகாசந்நிதானம் பொதுமக்கட்கு அருளாசி வழங்குவது.

21. திருவாமூரில் அப்பருக்குத் திருக்கோயில் எடுப்பித்துத்
திங்கள்தோறும் திருமுறைமுற்றோதல், விரிவுரை நிகழ்த்தியும் ஆண்டுதோறும் குருபூசையைச் சிறப்புற நடத்தியும் வருவது.


22. பெண்ணாகடத்தில் மெய்கண்டாருக்குக் கோயில் எடுத்து ஆண்டுதோறும் குருபூசையைச் சிறப்புற நடத்துவது.

23. சித்தர் காட்டில் ஸ்ரீ சிற்றம்பல நாடிகள் கோயில் திருப்பணி செய்து கும்பாபிஷேகம் நிகழ்த்தி, சமயச்சொற்பொழிவு, ஆண்டுதோறும் குருபூஜை நடத்தி வருவது.

24. சீகாழியில் திருமுலைப்பால் விழாவிலும், திருவாமூரில் சதய விழாவிலும் திருமுறை இசைவாணர்கட்குத் திருமுறைக் கலாநிதி பட்டம் பொறித்த பொற்பதக்கமும் ஆயிரம் ரூபாய் பணமுடிப்பும் வழங்கிவருவது.

25. ஆதீனச் சிறப்பு விழாவாகிய ஆவணி மூல நாளில் பழுத்த தமிழ்ப்புலமை பாலித்த தமிழறிஞர்க்குச் சிறப்புப் பட்டம் வழங்கி வருவது.

26. சிதம்பரம் திருக்கோயிலில் சமயாசாரியர்களோடு சந்தானாசாரியரைப் பிரதிட்டை செய்வித்து அஷ்டபந்தன மகாகும்பாபிஷேகம் நிகழ்த்தியதுடன் ஆண்டுதோறும் குருபூசை விழாக்களைக் கொண்டாடி வருவது.

27. இல்லங்கள் தோறும் திருமுறை முற்றோதல் செய்விப்பது.

28. சிவராத்திரி கார்த்திகைச் சோமவாரம் போன்ற நாள்களில் அன்பர்கட்குச் சமய விசேடதீட்சைகள் அளிப்பது.

29. மதுரையில் உள்ள ஸ்ரீலஸ்ரீ குருஞானசம்பந்தர் திருமடத்தில் அவ்வப்போது சமயச் சொற்பொழிவுகள் நடத்தி வருவது.

30. ஆதீன ஆலயங்களுக்கு மட்டும் அன்றிப் பிற ஆலயங்களுக்கும் திருப்பணி நிதி உதவி அளித்தல் - யாகசாலைச் செலவை ஏற்று நடத்துதல் முதலியன செய்து வருவது.

31. திருநாரையூர்ப் பொல்லாப் பிள்ளையார் கோயில் நம்பி ஆண்டார் நம்பிகள் குருபூஜை விழாவை நடத்துவது.

32. ஸ்ரீ குருஞானசம்பந்தர் பணி மன்றம் நிறுவி அதன் வாயிலாக மயிலாடுதுறையில் மழலையர்பள்ளி, செகண்டரிப் பள்ளி ஆகியன நடத்துவதோடு பிற ஊர்களிலும் இம்மன்றச் சார்பில் பள்ளிகள் மருத்துவ நிலையங்கள் அமைத்துச் சமூகத் தொண்டுகள் முதலியன செய்து வருவது.



* * * * *


வாழ்த்து

வையம் நீடுக மாமழை மன்னுக

மெய் விரும்பிய அன்பர் விளங்குக

சைவ நன்னெறி தான்தழைத் தோங்குக

தெய்வ வெண்திரு நீறு சிறக்கவே.

- பெரிய புராணம்.



வான்முகில் வழாது பெய்க

மலிவளம் சுரக்க மன்னன்

கோன்முறை அரசு செய்க

குறைவிலாது உயிர்கள் வாழ்க

நான்மறை அறங்கள் ஓங்க

நற்றவம் வேள்வி மல்க

மேன்மைகொள் சைவ நீதி

விளங்குக உலக மெல்லாம்.

- கந்தபுராணம்.


மல்குக வேத வேள்வி வழங்குக சுரந்து வானம்

பல்குக வளங்கள் எங்கும் பரவுக அறங்கள் இன்பம்

நல்குக உயிர்கட் கெல்லாம் நான்மறைச் சைவம் ஓங்கிப்

புல்குக உயிர்கட் கெல்லாம் புரவலன் செங்கோல் வாழ்க.

- திருவிளையாடற் புராணம்.



திருவார் கமலைப் பதிவாழ்க அப்பதி

சேரும்நின்றன்

மருவார் மரபும் திருநீறும் கண்டியும்

வாழ்கஅருட்

குருவாகும் நின்றன் திருக்கூட்டம் வாழ்கநற்

கோநிரைகள்

தெருவாழ் தருமைத் திருஞான சம்பந்த


தேசிகனே.


- ஆதீன அருள் நூல்.

1 comment:

  1. endrum madathai pinpatrum adiyen ...tamilum saivamum thalaithida aatheenam valara vendum

    ReplyDelete